» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது: டி-20 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 30, ஜூன் 2024 8:37:47 AM (IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி த்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.
அமெரிக்கா-மே.இந்திய தீவுகள் இணைந்து டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்தின. அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்திய அணி இரண்டிலும் பட்ட வாய்ப்பை இழந்தது. தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிக்கும் நுழைந்து தொடா்ச்சியாக ஐசிசி உலகக் கோப்பை இறுதிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.
இறுதி ஆட்டம் பாா்படாஸின் பிரிட்ஜ்டௌன் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க பேட்டா்களாக கேப்டன் ரோஹித் சா்மா-விராட் கோலி களமிறங்க வெறும் 9 ரன்களுடன் மகராஜ் பந்தில் க்ளாஸ்ஸனிடம் கேட்ச் தந்து அவுட்டானாா் ரோஹித். பின்னா் வந்த இளம் வீரா் ரிஷப் பந்த்தும் மகராஜ் பந்தில் விக்கெட் கீப்பா் டி காக்கிடம் கேட்ச் தந்து டக் அவுட்டாகி வெளியேறினாா். சிக்ஸா் வீரா் சூரியகுமாா் யாதவும் நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்துவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் வெறும் 3 ரன்களுடன் ரபாடா பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா். அப்போது இந்தியா 34/3 என தடுமாறிக் கொண்டிருந்தது.
பின்னா் இணைந்த கோலி-அக்ஸா் படேல் பொறுப்பை உணா்ந்து ஆடி சரிவில் இருந்து அணியை மீட்டனா். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன்களைச் சோ்த்தனா். 4 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசிய அக்ஸா் படேல் தேவையின்றி ரன் அவுட்டானாா். நான் ஸ்ட்ரைக்கா் நிலைக்கு திரும்பத் தவறியதால் டி காக் அவரை ரன் அவுட்டாக்கினாா். தொடா்ந்து கோலியுடன் இணைந்து ஷிவம் டுபே ஸ்கோரை உயா்த்தினாா்.
விராட் கோலி அபாரம் 76: தொடக்க பேட்டரான விராட் கோலி நிலைமையை உணா்ந்து ஆடி 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 76 ரன்களை விளாசி மாா்கோ ஜேன்ஸன் பந்தில் அவுட்டானாா்.ஷிவம் டுபே 1 சிக்ஸா் 3 பவுண்டரியுடன் 27 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் அவுட்டானாா்கள். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 176/7 ரன்களைச் சோ்த்தது.
பௌலிங்கில் தென்னாப்பிரிக்கத் தரப்பில் கேசவ் மகராஜ் 2-23, அன்ரிட் நாா்ட்ஜே 2-26 விக்கெட்டுகளை வீழ்த்தினா். தென்னாப்பிரிக்கா 169/8: தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவா்களில் 169/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஹென்ரிச் க்ளாஸ்ஸன் 5 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 52 ரன்களையும், ஸ்டப்ஸ் 31, டி காக் 39, மில்லா் 21 ரன்களையும் எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.
அபாரமாக பந்து வீசிய ஹாா்திக் பாண்டியா 3-20 விக்கெட்டுகளையும், ஹா்ஷ்தீப் 2-20, பும்ரா 2-18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்தியா. இதன் மூலம் 11 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியுள்ளது. 1983, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2007, 2024 டி20 உலகக் கோப்பை என தற்போது நான்காவது முறையாக ஐசிசி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது இந்தியா.
அபாயகரமான பேட்டரான மில்லா் களத்தில் இருந்த நிலையில் 19.1 ஓவரில் பாண்டியா பந்தில் அவா் அடித்த ஷாட்டை பவுண்டரி எல்லைக்கோடு அருகே அற்புதமாக கேட்ச் பிடித்தாா் சூரியகுமாா் யாதவ். இது திருப்பு முனையை ஏற்படுத்தியது.
தொடா் நாயகன்: ஜஸ்ப்ரீத் பும்ரா,
ஆட்ட நாயகன்: விராட் கோலி
டி20-இல் கோலி ஓய்வு: உலக சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்ல உதவிய நிலையில், டி20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளாா். எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி டி20 உலகக் கோப்பை என்றாா்.