» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 உலக கோப்பை: ஆப்கனை எளிதில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா
வியாழன் 27, ஜூன் 2024 10:12:52 AM (IST)
ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்மதுல்லா 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதில் குர்பாஸ், நபி மற்றும் நூர் அகமது ஆகியோர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன் மற்றும் ஷம்சி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். அந்த அணி 13 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்திருந்தது. இதையடுத்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க விரட்டியது. டிகாக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஃபரூக்கி வீசிய 2-வது ஓவரில் 5 ரன்களில் போல்ட் ஆனார் டிகாக்.
அதன் பின்னர் கவனமாக ஆடிய கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் இணையர், அணியை வெற்றி பெற செய்தனர்.8.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. மார்க்ரம் 23, ஹென்றிக்ஸ் 29 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான நாளாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.