» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரோகித் அதிரடி: ஆஸ்திரேலியாயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
செவ்வாய் 25, ஜூன் 2024 8:26:10 AM (IST)
டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 31, துபே 28, பாண்டியா 27 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து கோலியின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரில் வார்னரை அவுட் செய்தார் அர்ஷ்தீப் சிங். அதன் பின்னர் அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் ஹெட் இணைந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
9-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் மிட்செல் மார்ஷ். அவர் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் எடுத்த அபார கேட்ச் மூலம் அவர் ஆட்டமிழந்தார். 14-ஓவரில் மேக்ஸ்வெல்லை போல்ட் செய்தார் குல்தீப். அதற்கடுத்த ஓவரில் ஸ்டாய்னிஸை வெளியேற்றினார் அக்சர்.
வழக்கம் போலவே தனது ஆட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அளித்து வந்த டிராவிஸ் ஹெட்டை 17-வது ஓவரில் வெளியேற்றினார் பும்ரா. ரோகித் சர்மா கேட்ச் பிடித்திருந்தார். 43 பந்துகளில் 76 ரன்களை அவர் எடுத்திருந்தார். 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அவரது விக்கெட் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு முக்கியமானதாக இருந்தது.
கடைசி மூன்று ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் முதல் பந்தில் மேத்யூ வேடை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். குல்தீப் அபார கேட்ச் எடுத்து அதற்கு உதவினார். அதே ஓவரின் நான்காவது பந்தில் டிம் டேவிட் ஆட்டமிழந்தார்.
பும்ரா வீசிய 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது ஆஸி. இதன் மூலம் 24 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கேப்டன் ரோகித் வென்றார். அதோடு அரையிறுதிக்கும் குரூப்-1 பிரிவில் இருந்து முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. வரும் 27-ம் தேதி மாலை கயானாவில் இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் இந்தியா விளையாடுகிறது.
இந்திய நேரப்படி இன்று (ஜூன் 25) காலை நடைபெற உள்ள சூப்பர் 8 குரூப்-1 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 8’ சுற்றோடு வெளியேற வேண்டி இருக்கும். ஆப்கன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.