» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறுமா இந்தியா!
திங்கள் 24, ஜூன் 2024 11:03:12 AM (IST)
சூப்பர் -8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்.
தற்போது இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் விகிதம் 2.425-ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 3-வதுஇடத்தில் உள்ளது.
அந்த அணியின் நிகர ரன் விகிதம் 0.223-ஆகஉள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியும் 2 போட்டிகளில விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் -0.650-ஆக உள்ளது. வங்கதேச அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் எளிதில் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வி கண்டால் ஆஸ்திரேலியா, இந்தியா தலா 4 புள்ளிகளைப் பெற்றிருக்கும். இதைத் தொடர்ந்து நாளை ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 4 புள்ளிகளைப் பெறும். அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். இதில் நிகர ரன் விகிதம் அதிகமாக பெற்று முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். ஒருவேளை வங்கதேசத்துடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு எளிதாகச் செல்லும்.