» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பேட்டிங்கில் சூர்யகுமார், பவுலிங்கில் பும்ரா அசத்தல்: ஆப்கனை வென்றது இந்தியா!

வெள்ளி 21, ஜூன் 2024 10:47:59 AM (IST)டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களுக்கு வெளியேறினார். மிடில் ஆர்டர் பேட்டர்கள் சற்று பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர். ரிஷப் பந்த் 4 பவுண்டரிகளுடன் 20, தொடக்க வீரர்களில் ஒருவரான விராட் கோலி 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

4-ஆவது பேட்டராக களம் புகுந்த சூர்யகுமார் யாதவ், அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம் ஷிவம் துபே 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா விளையாட வர, சூர்யகுமார் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

பாண்டியா தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். பின்னர் ரவீந்திர ஜடேஜா 7, அக்ஸர் படேல் 12 ரன்களுக்கு அவுட்டாகினர். ஓவர்கள் முடிவில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3, நவீன் உல் ஹக் 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 182 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில், அதிகபட்சமாக அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்கள் அடித்தார். ரஹ்மானுல்லா குர்பாஸ் 11, ஹஸ்ரதுல்லா ஜஸாய் 2, இப்ராஹிம் ஜர்தான் 8, குல்பதின் நைப் 17 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

நஜிபுல்லா ஜர்தான் 2 சிக்ஸர்களுடன் 19, முகமது நபி 14, கேப்டன் ரஷீத் கான் 2, நூர் அகமது 12, நவீன் உல் ஹக் 0 ரன்களுக்கு வீழ்ந்தனர். முடிவில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3, குல்தீப் யாதவ் 2, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பௌலர் டேவிட் ஜான்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய அணியினர் இந்த ஆட்டத்தில் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். இந்தியாவுக்காக 1996-இல் 2 டெஸ்ட்டுகளில் விளையாடிய ஜான்சன், கர்நாடக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 125 விக்கெட்டுகளும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory