» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை தொடர்: வெளியேறியது பாகிஸ்தான் அணி!
சனி 15, ஜூன் 2024 11:22:40 AM (IST)
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ‘குரூப் - ஏ’ பிரிவில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறி உள்ளது.
வரும் சனிக்கிழமை அன்று குரூப் சுற்றில் மேலும் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாட வேண்டி உள்ளது. இருந்தும் அமெரிக்கா - அயர்லாந்து போட்டி மழையால் ரத்தாக ‘சூப்பர் 8’ சுற்றுக்கு 5 புள்ளிகள் பெற்ற அமெரிக்கா தகுதி பெற்றது. தற்போது 2 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான், எஞ்சியுள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கூட 4 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். அதனால் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியுள்ளது.
கடந்த 2009-ல் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, அதிக முறை டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆடிய அணி என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளது. கடந்த 2022-ல் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற வேண்டுமென பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மழை அது அனைத்தையும் மாற்றியது. நடப்பு தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது பாகிஸ்தான். கடந்த போட்டியில் கனடாவை வீழ்த்தி இருந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றை எட்டாமல் வெளியேறியது பாகிஸ்தான். தற்போதும் பாபர் தலைமையிலான அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இது அந்த அணியின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை விரக்தி அடைய செய்துள்ளது.