» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பும்ரா அபார பந்து வீச்சு : பாகிஸ்தானை வென்றது இந்தியா!

திங்கள் 10, ஜூன் 2024 10:26:45 AM (IST)பும்ராவின் அபார பந்து வீச்சு காரணமாக உலக கோப்பை டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானை 7 முறை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் (வங்கதேசத்துக்கு எதிராக 6 வெற்றி), இலங்கை (மேற்கிந்திய தீவுகள் எதிராக 6 வெற்றி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இப்போட்டியில் 15-வது ஓவரில் பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் பாலமாக ஆடி வந்த முகமது ரிஸ்வான் ஸ்டம்புகளை பும்ரா பெயர்த்த அந்தத் தருணம் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது. போட்டி முழுவதுமே பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்கள் என வெற்றி வாய்ப்பில்தான் இருந்தது. ரிஸ்வானுக்கு போட்ட பந்தின் தன்மை என்னவெனில் ரிஸ்வானை ஒன்று நினைக்க வைத்து வேறொன்றாக டெலிவரி செய்த ஜீனியஸ்தான். அதாவது அந்தப் பந்து அடிக்க வாகான ஃபுல் லெந்த் பந்து என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார் பும்ரா.

ஆனால், ரிஸ்வான் நினைத்ததை விடவும் கூடுதல் ஃபுல் லெந்த் பந்து, கிராஸ் பேட் ஷாட் தவறானது. இதனால் ரிஸ்வான் வாரிக்கொண்டு கிராஸ் பேட் ஷாட் ஆடப்போய் அவுட் ஆகி வெளியேறினார். பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் ரன் இல்லாத டாட் பால்கள். இதுதான் பிரஷர், இது ரிஸ்வான் போன்ற நல்ல வீரரையே ஈகோவைத் தூண்டி விட்டது என்றால் மிகையாகாது. அதே போல் முன்னதாக பாபர் அஸமுக்கு பும்ரா வீசிய பந்தும் அபாரமான வீச்சு. பாபர் அஸம் போன்ற பட்டைத்தீட்டப்பட்ட வீரருக்கே அதை ஆடுவதா விடுவதா என்ற குழப்பம் மேலிட்டது. கடைசியில் தொட்டார் கெட்டார்.

இஃப்திகார் அகமதுக்கு பும்ராவின் யார்க்கர் முயற்சி தொடை அளவிலான புல்டாசாக மாறியது. ஆனால், இஃப்திகாருக்கு அடிப்பதற்கான ரூம் எதுவும் இல்லை. இருந்தும் அதை அடித்தார். ஆனால், கொடியேற்றினார். அர்ஷ்தீப் சிங் அருமையாக கேட்ச் எடுத்தார்.

பும்ரா, 4 ஓவர் 14 ரன்கள் 3 விக்கெட் 15 டாட்பால்கள், ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே கொடுத்தார். அதே போல் ஹர்திக் பாண்டியாவின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்துகளும் இத்தகைய பிட்ச்களில் பிரச்சினைதான். ஃபகர் ஸமான் என்ற காட்டடி வீரரையும் ஷதாப் கான் என்ற பாகிஸ்தானின் பினிஷருக்குக்கு முடிவுரை எழுதினார் ஹர்திக்.

இரண்டுமே நன்றாக செலுத்தப்பட்ட பவுன்சர்கள். அக்சர் படேலும் அட்டகாசமாக வீசினார். என்ன இவரது பந்துகள் திரும்பாது என்பது அவர்களுக்குப் புரியாது. ஒரு கோணத்தில் வீசுவார், அது திரும்புமோ என்ற ஐயத்தை தோற்றுவிப்பார். இது அவரது தந்திரமல்ல, இதுதான் அவரது பந்து வீச்சே.

நேற்றைய இந்திய வெற்றியின் அடித்தளம் பும்ரா என்றால் அதற்கு முன்பாக ஓரளவுக்கு பந்து வீசுவதற்கு உரிய ஒரு இலக்கைக் கொடுத்தவர் ரிஷப் பந்த். ஆனால், ரிஷப் பந்த் ஆடிய மோசமான இன்னிங்ஸ் இது என்றால் அது மிகையல்ல. முகமது ஆமிர், நசீம் ஷா வீச்சை இவரால் ஆட முடியவில்லை என்பதும் இமாத் வாசிம் மிக மெதுவாக பந்தை வீசியதையும் கடைசி வரை புரிந்து கொள்ளாமலே அவரை ஃபைன் லெக்கில் ஆட முயன்று கிரீசில் தள்ளாடினார் என்பதையும் மறுக்க முடியாது.

ஆனால், அதிர்ஷ்டம் ரிஷப் பந்த் பக்கம் இருந்தது. 3 கேட்ச் வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன. பாகிஸ்தான் கேட்ச் எடுத்தால்தான் ஆச்சரியம். ஆனால், இத்தகைய பிட்சில் ரிஷப் பந்தின் மரபு மீறல் பேட்டிங் தான் கைகொடுக்கும், ரிஷப் பந்தின் தைரியமான பேட்டிங் கைகொடுத்தது.

ஹாரிஸ் ராவுஃபை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். 31 பந்துகளில் 42 என்பது இந்தப் பிட்சில் மிக மிக முக்கியமான பங்களிப்பு, இதற்குப் பாகிஸ்தான் பீல்டர்களுக்குத்தான் அவர் நன்றி கூற வேண்டும். பாகிஸ்தான் இந்தத் தோல்வி மூலம் சூப்பர் 8 வாய்ப்பை கடும் சிக்கலாக்கிக் கொண்டு விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory