» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி 7-வது வெற்றி

ஞாயிறு 12, மே 2024 8:53:45 PM (IST)


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக்  ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி 7-வது வெற்றியை பெற்றது.

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டன. முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்தித்தது. இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற கடைசி ஆட்டம் இதுவாகும்.

சென்னை அணியில் மிட்செல் சான்ட்னெருக்கு பதிலாக தீக்‌ஷனா இடம் பெற்றார். ராஜஸ்தான் அணியில் டோனவன் பெரீரா, ரோமன் பவெல் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், நன்ரே பர்கர் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர். சென்னை அணியினர் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்டது.

ஸ்கோர் 43 ரன்னை (6.2 ஓவரில்) எட்டிய போது தொடக்க ஜோடி பிரிந்தது. ஜெய்ஸ்வால் 24 ரன்னில் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிமர்ஜீத் சிங் பந்து வீச்சை அடிக்கையில் பந்து மேல் நோக்கி எழும்பி ருதுராஜ் கெய்க்வாட் கையில் தஞ்சம் அடைந்தது. ஜோஸ் பட்லரும் (21 ரன், 25 பந்து, 2 பவுண்டரி) சிமர்ஜீத் சிங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இதைத்தொடர்ந்து ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய சஞ்சு சாம்சன் 15 ரன்னில் (19 பந்து) சிமர்ஜீத் சிங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த துருவ் ஜூரெல் ஷர்துல் தாக்குர், தேஷ்பாண்டே பந்து வீச்சில் சிக்சர் விளாசினார்.

கடைசி ஓவரில் துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சில் துருவ் ஜூரெல் (28 ரன், 18 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), சுபம் துபே (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 141 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. 15 மற்றும் 34 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரியான் பராக் 47 ரன்களுடனும் (35 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), அஸ்வின் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் புகுந்தனர். வேகமாக மட்டையை சுழற்றிய ரச்சின் ரவீந்திரா 27 ரன்னில் (18 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. டேரில் மிட்செல் 22 ரன்னிலும் (13 பந்து, 4 பவுண்டரி), மொயீன் அலி 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே 18 ரன்னில் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஸ்வின் பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் பிடிபட்டார். அடுத்து ரவீந்திர ஜடேஜா 5 ரன்னில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார். 2-வது ரன் எடுக்க ரவீந்திர ஜடேஜா ஓடுகையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை பிடித்து எதிர்முனை ஸ்டம்பை நோக்கி எறிந்து ரன்-அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் ஸ்டம்பை மறைக்கும் வகையில் ஜடேஜா ஓடியதால் பந்து அவரது முதுகில்பட்டு குறி தவறியது. இதைத்தொடர்ந்து கள நடுவர் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தார். அந்த வீடியோ ரீபிளேயை ஆய்வு செய்த 3-வது நடுவர், ஜடேஜா பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவுட் என்று அறிவித்தார்.

அடுத்து சமீர் ரிஸ்வி, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். இருவரும் வெற்றி இலக்கை கடக்க வைத்தனர். 18.2 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்களுடனும் (41 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), சமீர் ரிஸ்வி 15 ரன்னுடனும் (8 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 26 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

13-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 7-வது வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. சொந்த மைதானத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தை தித்திப்புடன் நிறைவு செய்த சென்னை அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் வருகிற 18-ந் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை பெங்களூருவில் சந்திக்கிறது. 12-வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது 4-வது தோல்வியாகும். அந்த அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory