» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜாஸ் பட்லர் அபாரம்: 224 ரன்கள் இலக்கை விரட்டி ராஜஸ்தான் அணி வெற்றி!

புதன் 17, ஏப்ரல் 2024 12:32:19 PM (IST)



ஜாஸ் பட்லர் அதிரடி சதம் காரணமாக கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 224 ரன்கள் என்ற இலக்கை விரட்டி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன், பில் சால்ட் ஜோடி துவக்கம் கொடுத்தது. பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பில் சால்ட் (10), அவேஷ் கானில் அசத்தல் 'கேட்ச்சில்' வெளியேறினார். அடுத்து நரைன், ரகுவன்ஷி இணைந்தனர். பவுல்ட் வீசிய போட்டியின் 5வது ஓவரை எதிர்கொண்ட ரகுவன்ஷி, மூன்று பவுண்டரி அடித்து மிரட்டினார்.

போட்டியின் 8 வது ஓவரில் பந்து வீச வந்தார் அஷ்வின். இதன் 4, 5 வது பந்தில் பவுண்டரி அடித்து அசத்திய நரைன், பின் வந்த சகால் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். ரகுவன்ஷி (30), ஸ்ரேயாஸ் (11) விரைவில் கிளம்பினர். சகால் வீசிய 16வது ஓவரில் ரன்மழை பொழிந்தார் நரைன். 2 சிக்சர், 2 பவுண்டரி என அடிக்க, மொத்தம் 23 ரன் எடுக்கப்பட்டன. நரைன் 49 வது பந்தில் சதம் எட்டினார். மீண்டும் வந்த அவேஷ் கான், இம்முறை ரசலை (13) அவுட்டாக்கினார். நரைன் 109 ரன் எடுத்த நிலையில், பவுல்ட் பந்தில் போல்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 223 ரன் குவித்தது. ரிங்கு சிங் (20) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு பட்லர், ஜெய்ஸ்வால் (19) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சஞ்சு சாம்சன் (12), ரியான் பராக் (34) நிலைக்கவில்லை. துருவ் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) கைகொடுக்கவில்லை. பட்லர் 'தனி ஒருவனாக' போராடினார். பாவெல் 13 பந்தில் 26 ரன் எடுத்தார்.

கோல்கட்டா பீல்டிங், பவுலிங் சுமாராக அமைய, ராஜஸ்தான் பக்கம் வெற்றி திரும்பியது. ஹர்ஷித் ராணா வீசிய 19 வது ஓவரில் பட்லர், 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 19 ரன் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய கடைசி ஓவரில், ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டன. முதல் பந்தில் சிக்சர் அடித்த பட்லர், சதம் கடந்து மிரட்டினார். பின் 5வது பந்தில் 2, கடைசி பந்தில் 1 ரன் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது. பட்லர் (107) அவுட்டாகாமல் இருந்தார்.

அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 7-வது சதத்தையும் அவர் பதிவு செய்தார். நடப்பு சீசனில் அவர் பதிவு செய்துள்ள 2-வது சதம் இது. முதல் 6 ஓவர்களில் 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்திருந்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார். தனது இன்னிங்ஸ் குறித்து அவர் தெரிவித்தது

"முடியும் என்ற நம்பிக்கை தான் இந்த ஆட்டத்தில் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ரிதம் கிடைக்காமல் தவித்த போது ‘அமைதியாக இரு, தொடர்ந்து முன் செல்’ என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இதற்கு முன்பு தோனி, கோலி போன்ற வீரர்கள், நம்பிக்கையுடன் கடைசி வரை களத்தில் நின்று விளையாடியதை பலமுறை நாம் பார்த்துள்ளோம். அதை தான் நானும் செய்ய முயன்றேன்.

பெரிய இலக்கை விரட்டும் போது விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பெற செய்தது திருப்தி அளிக்கிறது. நெகட்டிவ் எண்ணங்கள் எப்போது வந்தாலும் அதற்கு முற்றிலும் நேர்மாறாக நான் எண்ணுவது வழக்கம். அதுதான் என்னை களத்தில் தொடர்ந்து முன்னே செல்ல வைக்கிறது” என ஆட்ட நாயகன் விருது பெற்ற பட்லர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory