» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் நீக்கம்

வியாழன் 29, பிப்ரவரி 2024 12:42:08 PM (IST)



இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, வருடாந்திர மத்திய ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்குகிறது. சர்வதேச போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்கள் ஏ பிளஸ், ஏ, பி, சி என்று 4 வகையாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதன்படி 2023-24-ம் ஆண்டுக்கான (2023 அக்.1 முதல் 2024 செப்.30 வரை) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா நேற்று வெளியிட்டார்.

எதிர்பார்த்தபடியே ஒப்பந்தத்தில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கழற்றி விடப்பட்டனர். முதுகுவலி பிரச்சினை இருப்பதாக கூறிய ஸ்ரேயாஸ் அய்யர் ஐ.பி.எல். போட்டிக்கு தயாராகி வந்தார். ஆனால் அவர் உடல்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியது. உள்ளூர் போட்டிகளில் ஆடுவதை தவிர்க்கும் நோக்குடன் அவர் காயத்தை காரணம் காட்டியது தெரியவந்தது. 

இதே போல் மனச்சோர்வு அடைந்து விட்டதாக கூறி முக்கியமான தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து ஒதுங்கிய இஷான் கிஷன் ஒரு பக்கம் ஐ.பி.எல். போட்டிக்காக தனியாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், ரஞ்சி போட்டியில் விளையாடுவதில் இருந்து பின்வாங்கினார். கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியும் ரஞ்சி போட்டியை புறக்கணித்ததால் தான் இருவருக்கும் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியம் கிடைக்கும் ஏ பிளஸ் என்ற உயரிய கிரேடில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 பேரும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

ரூ.5 கோடி சம்பளத்திற்குரிய ‘ஏ’ பிரிவுக்கு சுப்மன் கில், லோகேஷ் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இவர்கள் கடந்த சீசனில் ‘பி’ பிரிவில் இருந்தனர். அத்துடன் ஆர்.அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகியோர் ‘ஏ’ கிரேடை தக்க வைத்துள்ளனர்.

‘இளம் புயல்’ ஜெய்ஸ்வால், விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு மேலாக விளையாடாமல் உள்ள ரிஷப் பண்ட் உள்பட 5 பேர் ‘பி’ பிரிவில் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமாக கிடைக்கும். ரூ.1 கோடி சம்பளத்திற்குரிய ‘சி’ கிரேடில் ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் உள்பட 15 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

மேலும் ஒப்பந்தத்திற்கு புதிய தகுதியையும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு வீரர் குறைந்தது 3 டெஸ்ட் அல்லது 8 ஒரு நாள் போட்டி அல்லது பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அவர்கள் தானாகவே ‘சி’ கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக தற்போது 2 டெஸ்டில் ஆடியுள்ள ரஜத் படிதார், சர்ப்ராஸ்கான் ஆகியோர் தர்மசாலாவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் களம் இறங்கும் பட்சத்தில் அவர்கள் ‘சி’ கிரேடில் இணைந்து விடுவார்கள்.

அத்துடன் தேர்வு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் வளரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை கிரிக்கெட் வாரியம் புதிதாக உருவாக்குகிறது. அந்த பட்டியலில் ஆகாஷ் சிங், விஜய்குமார் வைசாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வாத் கவீரப்பா ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

புதிய ஒப்பந்த பட்டியல் வருமாறு:-

ஏ பிளஸ்: ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா

ஏ கிரேடு: ஆர்.அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா

பி பிரிவு: சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஜெய்ஸ்வால்.

சி பிரிவு: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்குர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ்குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ்கான், ரஜத் படிதார்.

ரஞ்சி கிரிக்கெட் போன்ற உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. அதாவது ஒப்பந்த வீரர்கள் தேசிய அணியில் இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory