» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசி.க்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!

செவ்வாய் 22, நவம்பர் 2022 4:19:44 PM (IST)நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டம் டை ஆன காரணத்தால் டி20 தொடரை 1-0 என இந்திய அணி வென்றுள்ளது.

முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. 2-வது டி20 ஆட்டத்தில் சூர்யகுமாரின் சதத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. நேப்பியரில் நடைபெற்ற 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.  நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியதால் டிம் செளதி கேப்டனாகச் செயல்பட்டார். மார்க் சேப்மன் இடம்பெற்றார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் விளையாடினார். இதனால் இந்த ஆட்டத்திலும் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக்குக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஃபின் ஆலனை 3 ரன்களுக்கு வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். ஆனால் அவருடைய அடுத்த ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார். மார்க் சேப்மன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸும் கான்வோவும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். கான்வே 39 பந்துகளிலும் பிலிப்ஸ் 31 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள். விரைவாக ரன்கள் எடுத்து ஸ்கோரை ஜம்மென்று உயர்த்திக்கொண்டு வந்தார்கள். 

15-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது நியூசிலாந்து. கடைசி 5 ஓவர்களில் குறைந்தது 50, 60 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ தலைகீழ். சிராஜ், அர்ஷ்தீப் ஆகிய இருவரும் அற்புதமாகப் பந்துவீசி விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக எடுத்தார்கள். பிலிப்ஸ் 54 ரன்களுக்கும் கான்வே 59 ரன்களுக்கும் ஆட்டமிந்தார்கள். 

இதன்பிறகு சீட்டுக்கட்டு போல சரிய ஆரம்பித்தது நியூசிலாந்து. சிராஜ் தனது கடைசி ஓவரில் ஜேம்ஸ் நீஷம், சான்ட்னர் ஆகியோரை வீழ்த்தி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். அர்ஷ்தீப் தனது கடைசி ஓவரில் டேரில் மிட்செல், இஷ் சோதி ஆகியோரை வீழ்த்தியதுடன் அந்த ஓவரில் ஆடம் மில்னையும் ரன் அவுட் செய்தார். 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.

இறுதியில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். கடைசி 8 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது நியூசிலாந்து. 

இந்திய அணியின் பவர்பிளே மிகவும் பரபரப்பாக அமைந்தது. விக்கெட்டுகளும் விழுந்தன. ரன்களும் அடிக்கப்பட்டன. இஷான் கிஷன் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து 2-வது ஓவரில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்த ரிஷப் பந்த், 11 ரன்களில் தேர்ட் மேன் பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயர் முதல் பந்திலேயே ஷார்ட் பந்தில் டக் அவுட் ஆனார். மில்ன் வீசிய 4-வது ஓவரில் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் கிடைத்தன. செளதி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் பாண்டியா. 

6 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது இந்தியா. ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு 9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது இந்தியா. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிஎல்எஸ் கணக்குக்கு அப்போது 75 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இந்தியா அதனை எடுத்திருந்ததால் ஆட்டம் டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. பாண்டியா 18 பந்துகளில் 30 ரன்கள், ஹூடா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 3-வது டி20 ஆட்டம் டை ஆனதால் டி20 தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. சிராஜ் ஆட்ட நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory