» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!

செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில், ஏற்பட்ட தகவல் தொடர்புத் தவறு காரணமாகத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவர்களிடம் இரு கைகூப்பி மன்னிப்பு கோரினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்குப் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கினார். கொச்சி கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவனத் துணைவேந்தர் மதுசூதன குரூப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

இத்தேர்வில் மொத்தம் 37,877 மாணவ-மாணவிகள் பட்டம் பெறத் தகுதி பெற்ற நிலையில், நேரில் பட்டம் பெற 758 முனைவர் பட்டதாரிகள் மற்றும் 113 தங்கப் பதக்கம் பெற்றவர்கள் என மொத்தம் 871 பேர் தகுதி பெற்றிருந்தனர். விழா தொடங்கியபோது, தங்கப் பதக்கம் பெற்ற 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாகப் பட்டம் வழங்குவார் என்றும், முனைவர் பட்டம் பெறும் 758 பேருக்கு அதிகாரிகள் பட்டம் வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த முனைவர் பட்டதாரிகள் மற்றும் மாணவிகள், "பல ஆண்டுகள் காத்திருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளோம். அனைவருக்கும் ஆளுநர் பட்டம் வழங்குவார் என்று கூறிவிட்டு தற்போது பாகுபாடு காட்டுவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பிக் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் அரங்கத்திற்குள் கூச்சலிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆளுநரிடம் நிலைமையை எடுத்துரைத்தனர். அதன்பின் மேடையில் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்ததாவது: ஆளுநர் அலுவலகத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட தகவல் தொடர்புத் தவறு காரணமாகவே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. விழா அழைப்பின் போதே 871 மாணவர்களுக்கும் நானே நேரடியாகப் பட்டம் வழங்கத் தயார் என்றுதான் துணைவேந்தரிடம் கூறியிருந்தேன்.

மாணவர்களின் ஆற்றலையும் உழைப்பையும் நான் ஒருபோதும் உதாசீனம் செய்ய மாட்டேன். தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் என்ற தவறான தகவல் எவ்வாறு பரவியது எனத் தெரியவில்லை. நிகழ்ந்த தவறுக்காக மாணவர்கள் அனைவரிடமும் இரு கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி, தகுதி பெற்ற 871 பேருக்கும் ஆளுநரே நேரடியாகப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory