» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே, முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய மின்சார ரயில் இன்ஜின் முதன்மை பராமரிப்பு தொழிற்கூடம் (Electric Locomotive Shed) அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "தென் மாவட்டப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கேற்ப, தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய மின்சார இன்ஜின் பராமரிப்பு பணிமனை (Trip Shed) அமைப்பதற்காக ரூ.101.82 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு புதிய ரயில் இயக்கப்படும் போதோ அல்லது நீட்டிக்கப்படும் போதோ, அதன் பயணியர் பெட்டிகளைப் (Coaches) பராமரிக்க 'பிட் லைன்' (Pit Line) வசதி எவ்வளவு முக்கியமோ, அதேபோல அந்த ரயிலை இயக்கி வரும் மின்சார இன்ஜின்களைச் சரிபார்த்து, அடுத்த பயணத்திற்குத் தயார் செய்து திருப்பி அனுப்ப 'ட்ரிப் ஷெட்' (Trip Shed) வசதியும் மிக அவசியமாகும். இந்த மின்சார லோகோமோட்டிவ் ட்ரிப் ஷெட் என்பது, இன்ஜின்கள் ஒரு பயணத்தை முடித்துவிட்டு அடுத்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், மிகக் குறுகிய நேரத்தில் அவற்றை முழுமையாகப் பரிசோதித்துச் சரிசெய்யும் ஒரு சிறப்புப் பராமரிப்பு நிலையமாகும்.
பூகோள முக்கியத்துவமும் தென் தமிழகப் புறக்கணிப்பும்: தமிழகத்தில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டப் பணிகள் முழுமையடைந்துவிட்டன. நாகர்கோவில் சந்திப்பில் பிட் லைன் பணிகளும், கன்னியாகுமரியில் பிளாட்பார்ம் மேம்பாட்டுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டமானது கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ரயில் பாதைகளை இணைக்கும் புவியியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முனையமாக (Terminal) அமைந்துள்ளது.
தற்போது நாகர்கோவிலில் அமையவிருக்கும் 'ட்ரிப் ஷெட்' தற்காலிகப் பராமரிப்புக்கு உதவும் என்றாலும், இன்ஜின்களை முழுமையாகப் பழுதுபார்க்கும் பெரிய அளவிலான முதன்மை மின்சார லோகோ ஷெட் (Main Locomotive Shed) தென் தமிழகத்தில் எங்கும் இல்லை. தற்போது தெற்கு ரயில்வேயில் ஈரோடு, அரக்கோணம், ராயபுரம், திருச்சி, தண்டையார்பேட்டை, ஜோலார்பேட்டை மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் மட்டுமே லோகோ ஷெட்கள் உள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தின் வட பகுதியிலோ அல்லது கேரளாவிலோதான் அமைந்துள்ளன. மதுரை கோட்ட எல்லைக்குள் எந்தவொரு பெரிய ரயில்வே தொழிற்கூடமும் இல்லாதது தென் தமிழகப் புறக்கணிப்பையே காட்டுகிறது. முன்னதாக, குழித்துறையில் அமையவிருந்த டிராக்ஷன் பவர் கண்ட்ரோலர் (Traction Power Controller) அலுவலகம் கேரளாவுக்கு மாற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது.
அகஸ்தீஸ்வரத்தில் அமைய வேண்டிய வாஜ்பாய் லோகோ ஷெட்: கடந்த 2000-ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில், அப்போதைய பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் இந்த பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாகர்கோவிலில் லோகோ ஷெட் அமைக்க ஆர்வம் காட்டினார். அவரது கனவை நனவாக்கும் வகையில், கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ரயில் நிலையம் பகுதியில், போதிய ரயில்வே நிலங்கள் உபரியாகக் கையிருப்பில் உள்ளதால், அங்கு இத்திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும்.
நாகர்கோவிலில் இப்போது கோரப்பட்டுள்ள ட்ரிப் ஷெட் பணிகளோடு இணைத்து, அகஸ்தீஸ்வரத்தில் முறையான பெரிய அளவிலான லோகோ ஷெட்டை அமைக்க வேண்டும். இது அருகில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகத்தில் இருந்து எதிர்காலத்தில் அதிகரிக்கவிருக்கும் சரக்கு ரயில் போக்குவரத்தைக் கையாள்வதற்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே, தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், அகஸ்தீஸ்வரத்தில் 'ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மின்சார லோகோமோட்டிவ் ஷெட்' அமைப்பதற்கான முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)

முதல்வர் விஜய் பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன் அறிவுரை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:26:41 PM (IST)








