» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் : உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

செவ்வாய் 23, ஜூன் 2026 12:09:05 PM (IST)



சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு எவ்வித முறையான பதிலும் இல்லை என்றும், அவர் சூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை ஒப்பிப்பது போல் பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் மரபு என்றும், ஆனால் இங்கு மரபை மீறி இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் இருமுறை பாடப்படவில்லை என்ற தனது கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை என அவர் சாடினார்.

'நான் முதல்வன்' திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், அதனை முடக்கியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என்றார். மேலும், மின்வெட்டு குறித்த கேள்விக்குச் சரியான பதிலளிக்காமல் திமுக மீது அரசு பழிபோட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிப் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாக முதலமைச்சர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் டிஜிபி நியமிக்கப்படவில்லை எனக் கூறும் முதலமைச்சர், ஒரே நாளில் அனைத்தையும் சரிசெய்து விடுவேன் எனக் கூறித்தான் ஆட்சிக்கு வந்தார் என்பதை நினைவூட்டினார். தற்போதைய 40 நாள் ஆட்சியில் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு நாளும் வன்முறைகள் நிகழ்ந்து வருவதாகவும், ஒரே நாளில் 24 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். குற்றச்சாட்டுகளில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

யார் தயவிலும் ஆட்சி செய்யவில்லை எனக் கூறும் முதலமைச்சர், ஆட்சி அமைந்தவுடன் அதிமுகவின் ஒரு தரப்பினரை மட்டும் ஏன் சென்று பார்த்தார் எனக் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு கட்சித் தலைவரைச் சந்திக்கப் போகும்போதும் முதலில் சோஃபா சென்றது, அதன்பின்னரே முதலமைச்சர் சென்றார் என விமர்சித்தார். அமைச்சர் அலுவலகத்திலேயே அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதாகவும், சட்டப்பேரவையை இசை வெளியீட்டு நிகழ்ச்சி, டிரெய்லர் நிகழ்ச்சி போன்ற சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் என்றும் அவர் சாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory