» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்த தூத்துக்குடி பெண் கைது: அரசுப் பேருந்தில் பரபரப்பு!
சனி 20, ஜூன் 2026 8:21:30 AM (IST)
களியக்காவிளை அருகே ஓடும் அரசுப் பேருந்தில் 70 வயது மூதாட்டி கண் அசந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச்சங்கிலியைப் பிளேடால் வெட்டிப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணைச் சக பயணிகள் மடக்கிப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பா. இவருடைய மனைவி கமலிபாய் (70). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்குவதற்காகச் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்துள்ளார். பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், கமலிபாய் இருக்கையிலேயே கண் அசந்து தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், கமலிபாய் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பிளேடால் நுட்பமாக வெட்டிப் பறித்துள்ளார். இச்செயலை அந்தப் பேருந்தில் இருந்த சக பயணிகள் கவனித்துள்ளனர். ஆனால், தூக்கத்தில் இருந்த கமலிபாய்க்கு இது தெரியவில்லை.
இதற்கிடையே அந்தப் பேருந்து திருத்துவபுரம் நிறுத்தம் வந்தடைந்த போது, நகையைப் பறித்த பெண் அவசர அவசரமாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கித் தப்பியோட முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சக பயணிகள் அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை அங்கே அதிரடியாக மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டதால் பேருந்து நிறுத்தத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தம் கேட்டு கண்விழித்த கமலிபாய், தனது கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச்சங்கிலி மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், நகையைப் பறித்த பெண்ணைத்தான் பயணிகள் பிடித்துள்ளனர் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாகக் களியக்காவிளை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் பிடிபட்ட பெண்ணிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் நகையைப் பறிக்கவில்லை என மறுத்துக் கூறினார். இருப்பினும் பெண் போலீசார் மூலம் அவரைச் சோதனை செய்தபோது, கமலிபாயின் 8 பவுன் தாலிச்சங்கிலி அவரிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைக் களியக்காவிளை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி மஞ்சேஸ்வரி (35) என்பதும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் நகைப்பறிப்பு மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ஓடும் பேருந்தில் பெண் திருடனைப் பயணிகள் மடக்கிப் பிடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








