» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவா? சி. மகேந்திரன் தவெக-வில் இணைந்ததால் சிபிஐ பரபரப்பு அறிக்கை!

வெள்ளி 19, ஜூன் 2026 4:44:00 PM (IST)



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது ஏற்கனவே கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை மிகச் சரியானதுதான் என்பதை அவரது தற்போதைய முடிவு நிரூபித்துள்ளதாகச் சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றியவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான சி. மகேந்திரன், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், "நடந்து முடிந்த தேர்தலில் தவெக சாதிய அரசியலைத் தோற்கடித்துக் காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் தவெக-வில் இணைந்துள்ளேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்துப் பாகுபாடுகளையும் தவெகவின் தேர்தல் வெற்றி உடைத்தெறிந்துள்ளது. நான் தொடர்ந்து எனது பாரம்பரிய சிவப்புத் துண்டோடு தவெக-வில் செயல்பட விரும்புகிறேன்" என்றார்.

சி. மகேந்திரனின் இந்தத் திடீர் கட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்த சி. மகேந்திரன், சமீபகாலமாகக் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார். 

குறிப்பாக, கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களால் உருவாக்கப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தைக் குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயாரித்திருந்தனர். அத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் சி. மகேந்திரன் செயல்பட்டதாலேயே அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். 

தனது தவறுகளைக் களைந்து கொண்டு கட்சியுடன் தன்னைத் பொருத்திக் கொள்ளக் கட்சி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார். இதன் மூலம், அவர் மீது கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை மிகச் சரியானது என்பதை அவரே இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்" என மு. வீரபாண்டியன் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory