» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

தமிழ்நாட்டின் கரோனா காலத்திற்குப் பிந்தைய ஐந்து ஆண்டு கால (2021-22 முதல் 2025-26 வரை) நிதிநிலைமை எவ்வாறு இருந்துள்ளது என்பது குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த விரிவான ஆய்வின் பயனாக மாநில அரசின் நிதிச் சுமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் 6 முதன்மையான ஆய்வு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த முக்கிய ஆய்வு முடிவுகளின் விபரங்கள் வருமாறு:
1. இரண்டு மடங்கு உயர்ந்த நிலுவைக் கடன்:
கடந்த 01.04.2021 அன்று தமிழகத்தின் நிலுவைக் கடன் அளவு 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தோராயமாக இரண்டு மடங்கு உயர்ந்து, 31.03.2026 நிலவரப்படி 10 லட்சம் கோடி ரூபாயாகப் பிரம்மாண்டமாக அதிகரித்துள்ளது.
2. மூலதனச் செலவைவிட வட்டிச் செலவு அதிகம்:
மாநில அரசு செலுத்தும் வட்டித் தொகையானது, மொத்த வருவாய் வரவினங்களில் தோராயமாக 23 சதவீதத்தையும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் தோராயமாக 35 சதவீதத்தையும் விழுங்குகிறது. 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி, ஆண்டு வட்டிச் செலவினம் 67,050 கோடி ரூபாயாக உள்ளது. இது, மாநிலத்தின் ஆண்டு மூலதனச் செலவினத்தை (Capital Expenditure) காட்டிலும் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். இதன் காரணமாக, புதிய சொத்துக்களை உருவாக்குவதற்குச் செலவிடுவதை விட, கடந்த காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே மாநில அரசு தற்போது அதிக அளவில் செலவு செய்து வருகிறது.
3. வரலாறுகாணாத வருவாய் பற்றாக்குறை:
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையானது தற்போது ஒரு கட்டமைப்பு ரீதியிலானப் பிரச்சினையாக மாறிவிட்டது. தற்போதைய கணக்குகளின்படி, தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக 78,324 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் 2.2 சதவீதம் ஆகும். இது கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பதிவான பற்றாக்குறையின் அளவைக் காட்டிலும் தொகையளவில் மிக அதிகமாகும்.
4. சொந்த வரி வசூல் திறன் சரிவு:
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்க்கும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கும் இடையிலான விகிதம், 2021-22 ஆம் ஆண்டில் 5.93 சதவீதமாக இருந்தது. இது 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி தோராயமாக 5.45 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த இரு தலைமுறைக்காலத்தை விட மிகக் குறைந்த சதவீதம் என்பதோடு, ஏனைய இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவாகும்.
5. மூலதனச் செலவினங்களுக்கான நிதி குறைப்பு:
ஒட்டுமொத்த வருவாய் வரவினங்களில் பொறுப்பேற்றச் செலவினங்களின் (Committed Expenditure) சதவீதம், இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் உள்ளது. இது, மூலதனச் செலவினங்கள் மற்றும் புதிய முதலீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை பெருமளவு குறைத்துள்ளது. இதன் விளைவாக, மொத்தச் செலவினத்தில் மூலதனச் செலவினத்தின் விகிதம் வெறும் 11.8 சதவீதமாக மட்டுமே சுருங்கியுள்ளது.
6. நிதி நிர்வாகத்திற்குப் பெரும் ஆபத்து:
மாநில அரசின் நிபந்தனைப் பொறுப்புகள் (Contingent Liabilities), கடனின் உண்மையான நிலையை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தோராயமாக 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துகின்றன. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்திற்குப் பெரும் நிதி அபாயத்தை (Fiscal Risk) ஏற்படுத்துகின்றன என வெள்ளை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








