» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)
முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்திட்டத்தை அப்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.பின்னர், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. விரிவாக்க திட்டத்தை ஸ்டாலின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்கிவைத்தார். தற்போது 17.55 லட்சம் மாணவ, மாணவிகள் இத் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்ய ஏதுவாக, பெரியார் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
மேலும் ‘‘சமூக நலம், மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள், மூத்த குடிமக்களிடம் தடையின்றி, துரிதமாக கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த பழக்கத்துக்கு ஆளான குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளிலும் சேர்த்தே அமல்படுத்துவதா என்பது பின்னர் அறிவிக்கப்படும். அப்போதுதான் எத்தனை மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்ற விவரம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








