» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை அருகே இருதரப்பு மோதலில் பெண் உள்பட 6 பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: 7 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:57:56 AM (IST)
நெல்லை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட 6 பேரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிய 7 பேர் கும்பலைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயகண்ணன் (வயது 23), மாரியப்பன் (வயது 21). இவர்கள் இருமரும் நெல்லை டவுன் பகுதியில் உள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டியில், பல்கலைக்கழகத்தின் எதிரே அமைந்துள்ள ஓர் உணவகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சாப்பிடச் சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கும் அங்குப் பாத்திரக் கடை நடத்தி வரும் வெள்ளாளன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பு வாலிபர்களுக்கும் இவர்களுக்கும் இடையே திடீரென வாய்வழியாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஜெயகண்ணனும், மாரியப்பனும் அங்கிருந்து புறப்பட்டுத் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அன்று இரவே வெள்ளாளன்குளம் கிராமத்தில் வைத்து, இவர்களுக்கும் ஏற்கனவே உணவகத்தில் தகராறு செய்த எதிர்தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பைச் சேர்ந்த 6 வாலிபர்கள் மற்றும் அதற்கு அருகிலுள்ள காங்கேயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் இணைந்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இக்கும்பல் ஜெயகண்ணன், அவருடைய தாயார் லட்சுமி (47), மாரியப்பன், மற்றொரு ஜெயகண்ணன் (19), பெருமாள் மனோ (18) மற்றும் கிருஷ்ணகுமார் (20) ஆகிய 6 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 6 பேரும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்தனர். இதனால் அந்த கிராமப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இக்கோரச் சம்பவம் பற்றித் தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த 6 பேரையும் மீட்டுப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இது குறித்துக் காவல் துறையினர் முறைப்படி வழக்குப் பதிவு செய்தனர்.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் இரவு முழுவதும் வெள்ளாளன்குளம் கிராமத்திலேயே நேரில் முகாமிட்டுக் குற்றப் புலனாய்வு விசாரணையைத் துரிதப்படுத்தினார். இதற்கிடையே, அரிவாள் வெட்டில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரிச் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் காவல்துறையினர் உரியப் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துணைச் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர் காளீஸ்வரி மற்றும் காவல்துறையினர் நள்ளிரவு முதல் விடிய விடியத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகளான பாண்டி என்ற இசக்கிபாண்டியன் (31), ராமர் என்ற ராம ஐயப்பன் (22), பாக்கிய நாகராஜன் (28), சுரேஷ் என்ற சுடலை (22) கொக்கி குமார் என்ற முத்துக்குமார் (29) சுரேஷ் (22) முருகன் என்ற பெரிய முருகன் (27) ஆகிய 7 பேரைக் காவல்துறையினர் நேற்று காலை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை வலைவீசித் தேடி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க வெள்ளாளன்குளம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் அண்மையில் பிரம்மதேசம், மானூர் மற்றும் தென்காசி மாவட்டம் நெட்டூரிலும் இதேபோல் மர்மக் கும்பல் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் நடந்துள்ள இந்த அரிவாள் வெட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: மின்கட்டணக் குளறுபடிகளுக்கு பாஜக கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:16:12 PM (IST)

தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)









கை ரேகை சட்டம்Jun 11, 2026 - 03:39:52 PM | Posted IP 162.1*****