» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் பொறுப்பேற்பு!

சனி 11, ஏப்ரல் 2026 11:31:28 AM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையாகவும், அமைதியாகவும் நடத்துவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை காவல் ஆணையர் அருணை மாற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தன.

சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அபின் தினேஷ் மோடக், இதற்கு முன் மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அவர் நேற்று இரவு சென்னை பெருநகர காவல் ஆணையராக உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாக ரீதியாகப் பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல், காவல் துறையிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இந்த வரிசையில் இறுதியாக, சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றிய அருண் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அபின் தினேஷ் மோடக் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுமட்டுமின்றி விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்களும் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory