» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!

புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலால் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்துவிட்டு, வணிக சிலிண்டர் உற்பத்தியைக் குறைத்துள்ளன.

இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) அதிகாரிகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் கூறுகையில்: "உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர்களை வழங்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகள், பள்ளி - கல்லூரி விடுதிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றனர்.

இந்தத் திடீர் தட்டுப்பாட்டால் குமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 5,000 சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஷாஜகான் கூறியதாவது:
"குமரி மாவட்டத்தில் உணவகங்களை நம்பி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இன்னும் 2 நாட்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால் கடைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. பழையபடி விறகு அடுப்பிற்கு மாறுவது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது."

சிவகுமார் (தேநீர் கடை உரிமையாளர்): "இருப்பில் உள்ள சிலிண்டரை வைத்து வியாபாரம் செய்கிறேன். இது தீர்ந்தால் கடையை மூட வேண்டியதுதான். தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி யாரேனும் சிலிண்டர்களைப் பதுக்கினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

சாந்தகுமாரி (தள்ளுவண்டி கடை): "சிலிண்டர் கிடைக்காததால் வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். சிறு வியாபாரிகளின் நலன் கருதி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்."

அருணாசலம் (உணவக உரிமையாளர்): "24 மணி நேரமும் இயங்கும் எங்கள் ஓட்டலுக்குத் தினசரி 3 சிலிண்டர்கள் தேவை. ஆனால் ஒன்று கூடக் கிடைப்பதில்லை. 15 தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும், கடை வாடகை செலுத்தவும் முடியாத சூழல் உருவாகியுள்ளது."

உணவகங்கள் மூடப்பட்டால், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் முறையும் (Swiggy, Zomato) முடங்கும். மேலும், வெளிமாநில மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர் அதிகாரிகள் உணவின்றித் தவிக்கும் சூழல் ஏற்படும். எனவே, மத்திய - மாநில அரசுகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory