» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

புதன் 10, டிசம்பர் 2025 4:12:55 PM (IST)



ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஓய்வூதியத்திற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு: பத்திரிகையாளர்கள் அன்றாட உலகச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடுவதோடு, அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும், பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் எனப் பாராது ஓய்வின்றிப் பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளர்களின் இத்தகைய பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள்: திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் பத்திரிகையாளர் நலவாரியம் 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டு, உழைக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை, இயற்கை மரணத்திற்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய உதவித் தொகைகள் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர் நலவாரியத்தில் தற்போது வரை 3674 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, 81 பத்திரிகையாளர்களுக்கு ரூ.8,56,500/- உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு நல நிதி, பத்திரிகையாளர் பணிக்காலத்தில் இயற்கை எய்த நேரிட்டால் குடும்பத்திற்கு உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், பத்திரிகையாளர் நல வாரியம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப் பின்னர் பத்திரிகையாளர் நலன் காத்திட உயர்த்தப்பட்ட உதவித் தொகைகள் 

இவ்வரசு பொறுப்பேற்றப்பின், 18.7.2022 ஆம் நாளிட்ட அரசாணையின்படி, பணியிலிருந்து ஓய்வுபெற்றவுடன் வழங்கப்படும் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.3 இலட்சம் என்பதை ரூ.4 இலட்சமாக உயர்த்தி வழங்கி வருகிறது.
 
பத்திரிகையாளர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000/-லிருந்து ரூ.12,000/-ஆக 14.06.2023 முதல் உயர்த்தப்பட்டு, 356 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000/-லிருந்து ரூ.6,000/- ஆக ஜுன் 2023 முதல் உயர்த்தப்பட்டு 72 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 125 பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், 27 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்றப்பின்னர் 59 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு 2 கோடியே 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்படக்காரர், செய்தியாளர், பிழை திருத்துநர் ஆகியோர் பணிக்காலத்தில் இயற்கை எய்த நேரிட்டால் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூ.1.25 இலட்சம் என்பதை ரூ.2.50 இலட்சமாகவும், ரூ.2.50 இலட்சம் என்பதை ரூ.5 இலட்சமாகவும், ரூ.3.75 இலட்சம் என்பதை ரூ.7.50 இலட்சமாகவும், ரூ.5 இலட்சம் என்பதை ரூ.10 இலட்சமாகவும் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது. 

பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து மருத்துவ உதவித்தொகை பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2,00,000/-லிருந்து ரூ.2,50,000/-ஆக 19.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 16 பத்திரிகையாளர்களுக்கு 30 இலட்சத்து 61 ஆயிரத்து 339 ரூபாய் மருத்துவ உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்குத் திராவிட மாடல் அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்திர ஓய்வூதியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கிட 27.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கும் தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் ச.செல்வராஜ், முனைவர் ஆர். பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory