» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி

வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். 

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரசார பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி ஆகும்.

கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப் பயணம் சென்றபோது அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை. வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோவில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது. முதலமைச்சரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோவில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். 

நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்துமேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சனையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை தி.மு.க அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது. ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் சேருவார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அதே போல் பா.ஜ.க.விற்கும் வருவார்களா? என்று கேட்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory