» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து: 11 பேர் உயிரிழப்பு!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:34:22 AM (IST)

காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேற்று நேருக்குநேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கடந்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து நேற்று காரைக்குடி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பஸ் காரைக்குடி அருகே திருப்பத்தூர் சமத்துவபுரம் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் வந்தது. அப்போது எதிரே திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சிலும் ஏராளமான பயணிகள் இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் இந்த 2 பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாக இரு பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளும் சிதைந்து அவற்றின் ஓரம் இருந்த பயணிகள் உடல் நசுங்கியும், படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடினார்கள். படுகாயம் அடைந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி அலறினார்கள்.
விபத்து நடந்ததை அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு மீட்புப்பணிகளில் இறங்கினர். மேலும் சம்பவ இடத்துக்கு நாச்சியார்புரம், திருப்பத்தூர் போலீசார் விரைந்தனர். திருப்பத்தூர். காரைக்குடியை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் வந்து, பஸ்களுக்குள் இடிபாடுகளில் சிக்கி போராடியவர்களையும், பலியானவர்கள் உடல்களையும் வேகமாக மீட்டனர்.
இந்த விபத்தில் திருப்பூரில் இருந்து வந்த பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் சென்றாயன் (36) மற்றும் 8 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சென்றாயனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பழைய வத்தலகுண்டு ஆகும்.
படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியான 11 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவரவில்லை. அதுகுறித்து அறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த லாவண்யா, காரைக்குடி அருகே ஆரியக்குடியை சேர்ந்த மல்லிகா (61), சிங்கம்புணரி எஸ்.எஸ்.நகரை சேர்ந்த முத்துமாரி (60), இளையான்குடியை சேர்ந்த கல்பனா (36), தேவகோட்டையை சேர்ந்த குணலட்சுமி (55), மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செல்லம் (55), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அம்மன்குறிச்சியை சேர்ந்த தெய்வானை (55) ஆகியோர் பெயர் விவரங்கள் மட்டும் தெரியவந்தன. மற்றவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.
விபத்தில் பலியான அரசு பஸ் டிரைவர் சென்றாயன் உடல் உள்பட 3 பேர் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. நொறுங்கி கிடந்த 2 பஸ்களையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









