» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளித்துள்ளதா? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கேரளத்தின் தேவைக்காக கருங்கல் ஜல்லிகள், எம் சாண்ட் ஆகிய கனிமங்களை தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்ல நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளத்தில் தரமான பாறைகள் கிடைக்கும் போதிலும் அவற்றை வெட்டி எடுக்க அனுமதிக்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக கனிம வளங்களை சூறையாட அரசே அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் கருங்கல் ஜல்லிகள் உள்ளிட்ட கனிமவளங்கள் பெருமளவில் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, கேரளத்திற்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதற்கு வசதியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 15 நிறுவனங்களுக்கு தமிழக அரசின் சுரங்கத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. இதை தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அளித்துள்ள தகவல் உறுதி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு கனிமங்களைக் கொண்டு செல்வதற்கு, தமிழ்நாட்டில் செயல்படும் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கடந்த 2019-ம் ஆண்டில் நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் வினா எழுப்பப்பட்டது. அந்த வினாவுக்கு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் நாள் பதிலளித்திருந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை, கேரளத்திற்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், அதே வினாவுக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அளித்த பதிலில், அன்னை புளு மெட்டல்கள், கே.கே.எம் புளு மெட்டல்ஸ் உள்ளிட்ட 15 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான உரிமங்கள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் வழங்கப்பட்டுள்ளன. 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்; கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசால் அமைக்கப்பட்ட காட்கில் குழுவும் இதைத்தான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக தமிழ்நாட்டின் கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமவளங்கள் தமிழ்நாட்டின் தேவைகளுக்கே போதவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டிற்குள் வழங்கப்படாமல் கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளுக்கும், சாலை அமைக்கும் பணிகளுக்கும் போதிய அளவு கனிம வளங்கள் கிடைக்கவில்லை. 

இதனால் ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றின் விலைகள் இரு மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருக்கின்றன. மேலும், அதிகனரக வாகனங்கள் மூலம் இவை தமிழ்நாட்டில் இருந்து கேரளம் கொண்டு செல்லப்படுவதால், சாலைகளும், பாலங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதற்கு கனிமவளக் கடத்தல்தான் காரணம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி கேரளத்தில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் கிடைப்பதை விட கடினமான, தரமான பாறைகள் கேரளத்தில்தான் உள்ளன. அவற்றை கேரள அரசு அழிக்காமல் பாதுகாக்கிறது. ஆனால், தமிழக அரசோ இயற்கை வளங்களை பாதுகாக்காமல் அழிக்கிறது. அதிலும் ஒரே வட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு இத்தகைய அனுமதி அளிக்கப்பட்டால் அங்குள்ள பாறைகள் என்னவாகும்? என்பது குறித்த கவலையோ, அக்கறையோ தமிழ்நாடு அரசுக்கு கொஞ்சமும் இல்லை.

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. கேரளத்திற்கு ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் கே.கே.எம் என்ற நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு தமிழக அரசு கோடிக்கணக்கில் அபராதம் விதித்திருக்கிறது. இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து கேரளத்திற்கு கனிமவளங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கனிம வளங்கள் காணாமல் போய்விடும்.

கேரளத்திற்கு கனிம வளம் அதிக அளவில் கொண்டு செல்லும் நிறுவனங்களும், குவாரிகளும் தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவு அவர்களின் தொகுதியில்தான் உள்ளன. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், மண்ணையும், மக்களையும் காப்பதில் அவருக்கு அதிக அக்கறை இருக்கும். அதன்படி, அவரது ராதாபுரம் தொகுதியில் மட்டுமின்றி, தென் மாவட்டங்கள் முழுவதும் இத்தகைய தவறான செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்துவதுதான் அவரது முதன்மைக் கடமையாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். எந்தெந்த குவாரிகளில் இருந்து கனிமவளம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோ, அந்த குவாரிகளின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். கேரளத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory