» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு மூலம் தி.மு.க. வெற்றி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 10:44:45 AM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. ஓட்டுகளை ஆளுங்கட்சியினரே போட்டு விட்டனர். அவர்கள் கள்ள ஓட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நாள் தோறும் சிறுமிகள் முதல் முதிர்ந்த பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. குறிப்பாக சிறுமிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கிருஷ்ணகிரியில் ஒரு மாணவிக்கு 3 ஆசிரியர்கள் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

அதேபோல், நெல்லிகுப்பம், மணப்பாறையிலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. வேலூரிலும் ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு சிலர் தொந்தரவு செய்து கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதனால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் போலீஸ் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி.யே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருப்பது உண்மையிலேயே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது கேள்விக்குறி?.

ஆனால் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொந்தரவு புகார்களில் தி.மு.க. அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. ஒரு பொம்மை முதல்-அமைச்சர் ஆட்சி செய்து கொண்டிருப்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக இருக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடந்திருக்கின்றன. இதை பார்க்கும்போது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் அந்த மாநில மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். விரைவில் அது நடக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் இருக்கிறது. அந்த தேர்தலில் எதிரி தி.மு.க.வை வீழ்த்தும் வகையில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. எல்லாரும் அதிகாரத்தை விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாத காரணத்தினால், அங்கு காங்கிரஸ் கட்சி வாங்குகின்ற ஓட்டை பார்க்கும் போது மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாரும் களத்தில் இல்லை. அங்கு பெற்ற வெற்றி போலி வெற்றி. எங்கள் கட்சி நிர்வாகிகள் ஓட்டுகளை ஆளுங்கட்சியினரே போட்டு விட்டனர். முக்கிய பொறுப்பாளர் ஓட்டையே தி.மு.க.வினர் பதிவு செய்திருக்கின்றனர். கள்ள ஓட்டின் மூலம் வாக்குகளை பெற்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறுகிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் என்ன நிலைமை ஏற்படும் என்பதை அந்த காலகட்டத்தில் சொல்வோம்.

தமிழகத்திற்கு நிதி தரவில்லை என்றும், அல்வா தான் தருகிறார்கள் என்றும் கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லைக்கு சென்று அல்வா சாப்பிடுகிறார். அவர் தான் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அல்வாவை கொடுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் 525 வாக்குறுதிகளை அளித்தார்கள். அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று கூற முடியுமா?. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிப்பது, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு இல்லை, கியாஸ் மானியம் கிடையாது, கரும்பு கொள்முதல் விலை இல்லை, நெல்லுக்கு ஆதார விலை என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த வருவாயை விட தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் வருகிறது என்கிறார்கள். அப்படி இருக்க, என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தார்கள்?. அரசு ஊழியர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியம் கொண்டு வருவோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன செய்தீர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உடன் இணைக்க அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறோம். கிராம ஊராட்சிகளின் மக்களை கலந்து ஆலோசனை செய்து அவர்களின் மனநிலை தெரிந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory