» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் மாநில அளவில் நீச்சல் போட்டி: சபாநாயகர் மு.அப்பாவு துவக்கி வைத்தார்

புதன் 22, ஜனவரி 2025 3:17:29 PM (IST)



திருநெல்வேலியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டிகளை சட்டமன்ற பேரவை தலைவர்மு.அப்பாவு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் வளாகத்தில் இன்று (22.01.2025) பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவில் நடைபெறும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டு அளவில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் வளாகமானது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நீச்சல் வளாகத்திற்கு ஈடானது. துணை முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது நீச்சல் வளாகத்தினை ஆய்வு செய்து, புனரமைக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில், ரூ.10 இலட்சம் மதிப்பில் நீச்சல் வளாகம் புனரமைக்கப்பட்டு, இன்று மாநில அளவில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் இன்று நடைபெறும் மாநில அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இன்றும், நாளையும் நடைபெறும் போட்டிகளில் 1407 மாணவிகளும், வருகின்ற 24.01.2025 மற்றும் 25.01.2025 ஆகிய தேதிகளில் 2063 மாணவர்களும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னாட்டு அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் M.S.நித்தீஷ் கலந்து கொண்டார். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நமது மாவட்டம் 48 தங்க பதக்கமும், 36 வெள்ளி பதக்கமும், 18 வெண்கலம் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் நீச்சல் வீரர் வீராங்கனைகள் 15 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 9 வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்து மாநிலத்தில் முதல் மாவட்டமாக நமது திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் 7 தங்கப்பதக்கமும், 4 வெள்ளி பதக்கமும், 5 வெண்கலம் பதக்கம் வென்று ரூ.12.50 இலட்சம் பரிசு தொகை வென்று சாதனை படைத்துள்ளனர். நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்து கொள்வதில் நீச்சல் தற்போது சிறந்த விளையாட்டாகவும் மாறியுள்ளது. நீச்சல் மனதை ஒருமுகப்படுத்துவதில் முதன்மையான விளையாட்டு என்பதை அறிந்து உங்கள் குழந்தைகளை நீச்சல் துறையில் பயிற்சியளிக்கும் பெற்றோர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார், களக்காடு நகராட்சி துணைத் தலைவர் பி.சி.ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) க.முத்துராஜ், தமிழ்நாடு நீர்நிலை விளையாட்டுக் கழகம் தலைவர் முனைவர் சேது.திருமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செ.ஜெபராஜ், முக்கிய பிரமுகர்கள் ஜோசப் பெல்சி, சித்திக் அவ்கள், ஆரோக்கிய எட்வின் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory