» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயிலில் புகையிலை பொருட்கள் கடத்திய வடமாநில வாலிபர் கைது: ரூ.25 ஆயிரம் அபராதம் !
செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:27:22 AM (IST)
செந்தூர் எக்ஸ்பிரசில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வடமாநில வாலிபர் முதலாவது நடைமேடையில் மூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது சிவகாசிக்கு செல்வதற்கு ரயில் ஏற வந்ததாக கூறினார்.
ஆனால் நெல்லையில் இருந்து சிவகாசிக்கு நேரடி ரயில் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்திருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 8½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அசாம் மாநிலம் நாள்பாரியை சேர்ந்த ரத்துல் அலி (வயது 27) என்பதும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அட்டை கம்பெனியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. ரத்துல் அலி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் சிலருக்கு தேவையான புகையிலை பொருட்களை வாங்குவதற்கு ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு புகையிலை பொருட்களை வாங்கிக்கொண்டு சென்னை சென்ட்ரல் வழியாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து சாத்தூருக்கு டிக்கெட் எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரசில் ஏறி உள்ளார். அதில் வந்து சாத்தூரில் இறங்கி சிவகாசிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சாத்தூர் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று உடனடியாக புறப்பட்டு விட்டது. ஆனால் புகையிலை பொருட்களுடன் ஏறிய ரத்துல் அலி, சாத்தூர் ரயில் நிலையம் வரும் போது அயர்ந்து தூங்கி விட்டார்.
இதனால் அவர், நெல்லை சந்திப்பு ரயில் வந்த போது, அதிர்ச்சி அடைந்து இறங்கி உள்ளார். இங்கிருந்து சாத்தூருக்கு செல்லும் வேறு ரயிலில் ஏறி செல்லலாம் என்று அங்கேயே காத்திருந்த போது சிக்கிக் கொண்டார் என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்துல் அலியை கைது செய்ததுடன், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். ரத்துல் அலி தன்னுடன் வேலை செய்த நண்பர்களிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று அபராத தொகையை செலுத்தி உள்ளார்.
naan thaanDec 31, 2024 - 07:41:40 PM | Posted IP 162.1*****