» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் : அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்

திங்கள் 30, டிசம்பர் 2024 4:07:57 PM (IST)



குமரி மாவட்டத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண் திட்டம்” விரிவாக்கத்தினை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.12.2024) சமூகநலத்துறை சார்பில் தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்கத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரி கலையரங்கில், மாணவியர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

விழாவில் அவர் தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் , பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை உருவாக்கிட இயலும் என்பதை உணர்ந்த நம் முதலமைச்சர், பெண்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்கான வரலாற்றுச் சாதனை திட்டமான புதுமைப் பெண் திட்டத்தினை 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள்.

உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும். 

இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவியர்கள் பயன்பெறுவர். தகுதியான அனைத்து புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கும் உதவித்தொகை கிடைப்பதை அனைத்து கல்லூரி தொடர்பு அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். இத்திட்டத்தினை விரிப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாணவியர்கள், பேராசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory