» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் கல்லூரி மாணவி பலி : நெல்லை அருகே பரிதாபம்!

வெள்ளி 15, நவம்பர் 2024 8:36:49 AM (IST)



நெல்லை அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான பஸ்சில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை அருகே மானூரை அடுத்த வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பால்துரை, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி எஸ்தர் மேரி. இவர்களுக்கு 4 மகள்கள். 3-வது மகள் செல்வம் (19), பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் சுதர்சனா (15), நெல்லை டவுனில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலையில் செல்வம் தனது தங்கை சுதர்சனாவை பள்ளிக்கு அனுப்புவதற்காக மொபட்டில் நெல்லை-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள சிவாஜிநகர் பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வந்த டவுன் பஸ்சில் சுதர்சனா ஏறியதும், அந்த பஸ்சின் முன்பாக செல்வம் மொபட்டில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சுரண்டையில் இருந்து அழகியபாண்டியபுரம் வழியாக நெல்லை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மொபட், பஸ்சின் அடியில் சிக்கி கிடந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த நாஞ்சில் ராஜாவை (28) கைது செய்தனர்.

இறந்த செல்வத்தின் உடலைப் பார்த்து தங்கை சுதர்சனா மற்றும் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ஸ்கூட்டர் மீது மோதிய தனியார் பஸ்சின் முன்பக்க கேமராவில் விபத்து வீடியோ பதிவாகி இருந்தது. அதில், சாலையோரம் நின்ற அரசு டவுன் பஸ்சை அசுர வேகத்தில் தனியார் பஸ் முந்தி சென்றபோது, சாலையின் குறுக்காக திடீரென்று மொபட்டில் வந்த செல்வத்தின் மீது மோதிய காட்சி நெஞ்சை பதைபதைக்கும் வகையில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

அந்தNov 15, 2024 - 09:41:53 AM | Posted IP 162.1*****

சாலையோரம் நின்ற அரசு டவுன் பஸ் டிரைவர் ஐயும் கைது பண்ணுங்க , பின்னாடி பஸ் வரும் பொது தெரிந்ததும் ஏன் நிறுத்த சொல்லவில்லை ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory