» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!
திங்கள் 11, நவம்பர் 2024 12:11:06 PM (IST)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பெண் கல்வி ஊக்குவிப்புத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்தல் / கழிவுகளை அகற்றுதல் / தோல் உரித்தல் / தோல் பதனிடுதல் / குப்பை பொறுக்குதல் / தனியார் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களில் துப்புரவு பணிபுரிபவர்கள் / பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணிபுரிபவர்கள் ஆகிய சுகாதாரக் குறைவான தொழில்களில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களின் குழந்தைகள் இத்திட்டத்திம் கீழ் பயன்பெறலாம்.
பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய வெளி மாணாக்கர்களுக்கு (Day Scholar) ஆண்டுக்கு ரூ.3500/- மற்றும் விடுதி (Hosteller) மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8000/- வீதம் வழங்கப்பட்டுவருகிறது. குடும்ப ஆண்டு வருமான வரம்பு ஏதுமில்லை. சாதி, மத பேதமில்லை. இக்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்கள் பயிலும் பள்ளியில் சமர்பித்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை சமர்பிக்க வரும் நவம்பர் 25ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு வருமான வரம்பு இன்றி பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500/-, 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000/- மற்றும் 7 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1500/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய மாணவிகள் மேற்படி இணையமுகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 25-க்குள் உரிய பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொள்கிறார்கள்.