» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

திங்கள் 11, நவம்பர் 2024 8:36:37 AM (IST)



நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் ஓடி வயல் வெளிகளை செழிப்படைய செய்து விட்டு புன்னக்காயல் கடலில் கலக்கிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்த ஆற்றில் நகர்ப்புறங்களில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதனால் ஆறு மாசுபட்டு கூவம் நதி போல் மாறி வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா ஆஜராகி, பாதாள சாக்கடை திட்டம் முடிவடையும்போது தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் தாங்களே நேரில் வந்து தாமிரபரணி ஆற்றை பார்வையிடுவதாக கூறினார்கள். அதன்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேற்று நெல்லைக்கு வந்தனர். வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் நீதிபதிகளை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே தாமிரபரணி ஆற்றுக்கு கழிவுநீர் செல்லும் ஓடை மற்றும் மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ராமையன்பட்டியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டனர். அங்கு மாநகரில் சேகரித்து கொண்டு வரப்படும் கழிவுநீர், சுத்திகரித்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதாவது, மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்த தற்காலிக ஏற்பாடுகளை நீதிபதிகள் பார்த்து, யாரை ஏமாற்றுவதற்கு இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகிறீர்கள். இந்த திட்டம் முறையாக செயல்பட அமைத்ததை போல் தெரியவில்லை. ஆற்றுக்குள் அமைத்திருப்பவை சுத்திகரிப்பு நிலையமே கிடையாது.

பாதாள சாக்கடை திட்டம் முடிவடையும் வரை எந்த முறையில் கழிவு நீர் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். கோர்ட்டில் வந்து பதில் சொல்வது போல் சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். களத்திற்கு நாங்கள் நேரடியாக வந்து விட்டோம். ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் பழைய முறையை ஏன் இன்னும் பயன்படுத்துகிறீர்கள். நவீன தொழில்நுட்பம் எப்போது பயன்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பி அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.

முன்னதாக மனுதாரரின் வக்கீல் அருள், நீதிபதிகள் வருகையையொட்டி மாநகராட்சி செய்துள்ள தற்காலிக நடவடிக்கைகள் குறித்தும், நிரந்தர தீர்வு காண செய்ய வேண்டியவை குறித்தும் நீதிபதிகளுக்கு எடுத்துக்கூறினார். ஆணையாளர் சுகபுத்ரா, தற்போது மேற்கொள்ளப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களின் அடுத்தகட்ட மேம்பாடுகள், அதன் மூலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும் என்று விளக்கம் அளித்தார்.

ஆய்வின்போது நீதிபதிகளுடன் ராபர்ட் புரூஸ் எம்.பி., அரசு கூடுதல் தலைமை வக்கீல் வீரகதிரவன், வக்கீல்கள் ஆயிரம் செல்வகுமார், அருள், மனுதாரர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோரும் சென்றனர்.

மேலும் ராமையன்பட்டி மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தபோது நீதிபதிகள், அருகில் உள்ள பகுதியையும் பார்வையிட்டனர். அங்கு நாலாபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே நின்றிருந்தன. மேலும் அந்த பகுதியில் ஒரு பறவை கூட காணப்படவில்லை. இதையடுத்து பெரிய நீர்த்தேக்கமாகவும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேறும் பகுதியாக உள்ள இங்கு ஏன் பறவைகள் காணப்படவில்லை. பறவைகள் எங்கே? என்று அதிகாரிகளிடம் கேட்டனர்.

அப்போது அவர்கள், அதிகாரிகள் கூட்டம் அதிகமாக வந்திருப்பதால் கலைந்து சென்றிருக்கும் என்று பதில் அளித்தனர். ஆனால் நீதிபதிகள், "இது பறவைகள் வராத சுற்றுச்சூழல் இடமாக மாறி விட்டதையே இது காட்டுகிறது” என்றனர். இறுதியாக குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களையும் நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் நீதிபதிகள், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் ஆணையாளர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory