» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது தாக்குதல் : கவுன்சிலர்-வக்கீல் கைது
திங்கள் 11, நவம்பர் 2024 8:31:43 AM (IST)
முனைஞ்சிப்பட்டி அருகே புகார் குறித்து விசாரணை நடத்த சென்ற சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை தாக்கியதாக அண்ணன், தம்பியான கவுன்சிலர்-வக்கீல் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே முனைஞ்சிப்பட்டியை அடுத்த பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன்கள் பேச்சிமுத்து (40), கிளிண்டன் (29), மணிகண்டன் (28). இதில் பேச்சிமுத்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கிளிண்டன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலராகவும், மணிகண்டன் வக்கீலாகவும் உள்ளனர்.
இந்நிலையில் இடப்பிரச்சினை சம்பந்தமாக நேற்று முன்தினம் கிளிண்டன், மணிகண்டன் ஆகியோர் தனது அண்ணன் பேச்சிமுத்துவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் அல்லிஅரசன் மற்றும் போலீஸ்காரர் சிவகாமி செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கிளிண்டன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்து சப்-இன்ஸ்பெக்டரையும், போலீஸ்காரரையும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 போலீஸ்காரர்களை தாக்கியதாக கிளிண்டன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.