» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யார் வந்தாலும் 2026-ல் திமுகதான் வெற்றி பெறும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
செவ்வாய் 5, நவம்பர் 2024 8:09:43 PM (IST)
2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து காரில் விழுப்புரம் வந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மரகதம் கந்தசாமி மண்டபத்தின் முன்பு புதியதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயரமுள்ள வெண்கல சிலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைத்தாலும்; எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, அவர்களுக்கு புரிய வைப்போம் தமிழ் மண்ணில் திமுகவுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று.
இன்றிலிருந்து அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வோம். அரசின் 3 ஆண்டுகால திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் நமது அரசின் திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் இருக்கிறார்கள்; ஆதலால் நீங்கள் (திமுக நிர்வாகிகள்) உங்களது பிரசாரத்தை தொடங்குங்கள். இவ்வாறு அவர் கூறினார்.