» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெலுங்கு மக்கள் பற்றி பேச்சு: நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செவ்வாய் 5, நவம்பர் 2024 7:44:46 PM (IST)
தெலுங்கு மக்கள் பற்றி தவறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, ‘300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்களும் வலுத்தன.
தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி நேற்று விளக்கம் அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள்.
தெலுங்கு மக்களை நான் எதுவுமே சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?.
நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.