» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்: உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

சனி 19, அக்டோபர் 2024 8:56:25 AM (IST)

நெல்லையில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ‘நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். அதில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் மருத்துவ கல்லூரி படிப்புக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதனால் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பல்வேறு பயிற்சி மையங்கள் காளான் போல் முளைத்து விட்டன. அத்தகைய பயிற்சி மையங்களுக்கு மவுசும், கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உயர் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு கேரளாவில் பயிற்சி அளித்து வந்த, அம்மாநிலத்தைச் சேர்ந்த நீட் அகாடமிகள் நெல்லையிலும் மையங்களை நிறுவினார்கள். இதில் ஒரு பயிற்சி மையமாக நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே திருவனந்தபுரம் ரோட்டில், ‘ஜல் நீட் அகாடமி' செயல்பட்டு வருகிறது.

இங்கு நெல்லை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பயிலும் மாணவர்கள் பிரம்பு கம்பாலும், மாணவிகள் காலணியாலும் தாக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பயிற்சியாளர், சரியாக படிக்கவில்லை என்று கூறி மாணவர்களை வரிசையாக வரவழைத்து சினிமா காட்சி போல் தாக்கி உள்ளார். இதில் மாணவர்களுக்கு முதுகு உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாணவிகளை நோக்கி காலணியை வீசி தாக்கி உள்ளார்.

கொடூரமான இந்த காட்சிகள் கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று அந்த அகாடமிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் வருவதை அறிந்த அந்த மையத்தின் பயிற்சியாளர் கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்காக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று நெல்லைக்கு வந்திருந்தார். அவர் நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலை அறிந்தார் உடனே நேற்று பிற்பகலில் சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்துக்கு நேரில் சென்றார்.

அங்கு தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்களை தனித்தனியாக வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது உடலில் ஏற்பட்ட காயங்களை பார்வையிட்டு, தாக்கப்பட்ட விவரத்தை கேட்டறிந்தார். அங்கிருந்த ஊழியர்கள், மற்ற பயிற்சியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கூறியதாவது: தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை அறிந்து நேரில் விசாரணை நடத்தினேன். இங்கு பயிற்சி மைய உரிமையாளர் இல்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரித்தேன். அவர்களின் உடம்பில் காயங்கள் உள்ளன. மனித உரிமை மீறப்பட்டது தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கும். அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.

தாக்கப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிச்சட்டப்படி விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது. எதுவாக இருந்தாலும் மாணவர்களை அடிப்பது தவறான செயல். நீட் பயிற்சி மையத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது என்பது மாணவர்கள் எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இந்த ஆட்சியில் நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம். இதில் எந்த தலையீடும் இருக்காது. மக்கள் இந்த ஆணையத்தை நிச்சயமாக நம்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவ விசாரணை அதிகாரியான மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி கூறுகையில், ‘‘தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கடந்த 12-ந்தேதி புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையின் படி அகாடமியின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அகமத் வெட்டியாடன் மீது மாணவர்களை தாக்குதல், செருப்பால் அடித்தல், சிறார் நீதிச்சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory