» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5பேருக்கு தலா ரூ. 5 லட்சம்: முதல்வர் அறிவிப்பு!

திங்கள் 7, அக்டோபர் 2024 4:48:53 PM (IST)

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் 5 விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory