» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
வியாழன் 3, அக்டோபர் 2024 10:06:09 AM (IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- வேட்டையன் படத்தில் என்கவுண்டர் தொடர்பான வசனங்கள் உள்ளது. இந்த படத்தில் உள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும்.
அதுவரை படத்தை வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றே விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வேட்டையன் படத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற உள்ளது. வேட்டையன் படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்தின் 170-வது படம் ஆகும். ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த. செ. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், டாணா ரகுபதி, மஞ்சு வாரியார் உள்பட பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெயிலர் நேற்று மாலை வெளியானது. என்கவுண்டர் தொடர்பான சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. ஒருவாரத்திற்குள் என்கவுண்டர் பண்ணியே ஆக வேண்டும் என சொல்லும் காட்சிக்கு தேவையில்லை, ஒருவாரம் ரொம்ப அதிகம் மூணே நாளில் டிபார்ட்மென்ட்டிற்கு நல்ல பெயர் வரவேண்டும்..
குற்றங்கள் தொற்று நோய் மாதிரி அதை வளர விடக்கூடாது. அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியாக இருப்பதை விட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை.. என ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல, "அநீதியை நீதியாலதான் வெல்லனும், இன்னொரு அநீதியால இல்ல” என்ற வசனத்தை அமிதாப்பச்சன் பேசுகிறார். அமிதாப்பச்சன் வழக்கறிஞராக வருகிறார். அமிதாப்பச்சனுக்கு பதில் அளிக்கும் வகையில், "அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்குறதவிட, அதிகாரத்த கைல எடுக்குறது தப்பில்ல” என்று ரஜினிகாந்த் பேசுவது போல டிரெயிலரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.