» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்!
புதன் 2, அக்டோபர் 2024 8:58:40 AM (IST)
குற்றாலத்தில் மழை குறைந்து, அருவிகளில் சீரான நீர்வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதாவது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
நேற்று முன்தினம் காலையில் நீர்வரத்து சீரானதால் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மாலையில் மெயின் அருவியிலும் தண்ணீர் சீராக விழுந்தது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணியளவில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் தடை விதிக்கப்பட்டது.
நேற்று காலையில் இருந்து குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லை. அதுபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்யவில்லை. வெயில் சுட்டெரித்தது.
இதனால் மெயின் அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையறிந்த அவர்கள் அருவியில் குவிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மற்ற அருவிகளிலும் உற்சாகமாக குளித்தனர்.
தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், இன்று (புதன்கிழமை) காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதாலும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.