» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறை கைதிகள், அச்சத்தால் குறைகளை வெளியே சொல்வதில்லை: உயர் நீதிமன்றம் கருத்து
புதன் 18, செப்டம்பர் 2024 5:34:46 PM (IST)
தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரி விசாரணை கைதி பக்ரூதின் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கேண்டீன் திறந்திருக்கிறதா? மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து அம்பத்தூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என்.மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . அப்போது , புழல் சிறையில் கேண்டீன் திறந்திருப்பதாக அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர் எஸ். நதியா, நீதிபதி வருவதை அறிந்து வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட தின்பண்டங்களை வைத்து கேண்டீன் திறந்து உள்ளதை போல சிறை நிர்வாகம் காட்டியதாக கூறினார். மேலும்,திடீர் ஆய்வுக்கு உத்தரவிட்டால் உண்மை வெளியில் வரும் எனவும் கூறினார் .
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கேண்டீன் தொடர்பாக ஒரு கைதி மட்டுமே புகார் அளிப்பதாகவும், சிறை விதிமுறைகளின் படி சிறை நிர்வாகம் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை எனவும், தமிழகத்தில் சிறைகள், விதிகளின் படியே செயல்படுகின்றன என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சிறை விதிகளின் படி புழல் கேண்டீன் பராமரிக்கப்படுவதாகவும், எதிர்காலத்திலும் இதே போல பராமரிக்கப்படும் என சிறைத்துறை டிஐஜி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.