» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் 'ஜாகிங்' சென்ற யு.ஏ.இ அமைச்சர்
புதன் 24, ஜூலை 2024 5:32:45 PM (IST)
சென்னை வந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து சாலையில் ஜாகிங் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னையில் இன்று (ஜூலை 24) 'இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸ்' என்ற மாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி தலைமையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் யு.ஏ.இ அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மற்றும் அந்நாட்டினர் சிலர், சென்னை பெசன்ட் நகரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து காலையில் 'ஜாகிங்' சென்றனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
பின்னர் சாலையோர டீ கடையில் அமர்ந்து, அனைவரும் டீ குடித்தனர். அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். ஜாகிங் சென்றது குறித்து அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சருடன் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டது மகிழ்ச்சியான தருணம். யு.ஏ.இ மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவுகள், மிகப்பெரிய பொருளாதார உறவுகளில் ஒன்று.
சென்னையில் இன்று மாநாடு நடக்கிறது. தொழில்துறையில் உள்ள அனைவரையும் அழைக்கிறோம். புதிய பொருளாதாரங்களைப் பற்றி பேச உலகை ஒன்றிணைக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று சென்னை மாநாட்டில் பங்கேற்கும் அப்துல்லா, நாளை காலை கேரளாவிற்கு செல்ல உள்ளார்.