» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு : தமிழிசை விமர்சனம்!

புதன் 24, ஜூலை 2024 10:41:48 AM (IST)

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களின் நலனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை. வழக்கமாக சொல்லப்படும் திருக்குறள், புறநானூறு, ஆத்திசூடி பாடல்கள், வரிகள் கூட இடம்பெறவில்லை. அதேபோல் தமிழ்நாடு சார்பாக வைக்கப்பட்ட நிதி கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டுக்கு என்று சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கலின் போதே தமிழ்நாடு எம்பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாளை தி.மு.க. மற்றும் அதன் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதேபோல் வரும் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் புறக்கணிக்கிறேன் என்று அறிவித்தார். இதனால் மற்ற மாநில முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களின் நலனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார். மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழக நலனும்,தமிழக மக்களின் நலனும் இருக்கிறது மேலும் தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும். 

இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழக நலனை முதல்-அமைச்சர் புறக்கணிக்கிறார். இவர்களின் அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory