» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நூறு நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இருக்கும்: அண்ணாமலை பேட்டி
புதன் 24, ஜூலை 2024 8:27:10 AM (IST)
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 100 நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்களின் பெயர் இருக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோவில் வந்தார். அப்போது கருப்புகோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் சேமிப்பு அதிகமாகும். கடந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக அறிவிக்கப்பட்ட ரூ.11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி நிதி தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. புதிதாக ஒரு மாநிலம் பிரியும்போது அதன் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி அமராவதி நகருக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. கோவைக்கும் மெட்ரோ ரெயில் அடுத்த பட்ஜெட்டில் வர தான் போகிறது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் பெயர்களும் பட்ஜெட்டில் இருக்கிறது. 100 நகரங்கள் என்ற பெயர் பட்டியல் பட்ஜெட்டில் உள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள நகரங்களின் பெயரும் இருக்கும். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் போக்குவரத்து மேம்பாடு என்று கூறப்பட்டுள்ளது.
அதில் சென்னை உள்ளிட்ட நகரங்கள் இருக்கும். நாளை அல்லது நாளை மறுநாள் எந்தெந்த நகரங்கள் என்று தெரியவரும். பா.ஜனதா பட்ஜெட்டானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை போல இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இலவசம்...இலவசம்... என்று தான் இருந்தது. அதுவே பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி...வளர்ச்சி... என்று இருந்தது. எனவே இந்த இரண்டையும் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்?
நீட் தேர்வில் குளறுபடி என்று சொல்ல முடியாது. முதல் முறையாக உள்ளூரில் வினாத்தாள் கசிந்துள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் எத்தனை முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் கசிந்துள்ளது. அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வேண்டாம் என்று சொல்ல முடியுமா?. தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
அரசியலில் நீடிக்கலாமா? என்று சிந்திப்பதாக கூறினேன். அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு கூறவில்லை. தமிழகத்தில் நேர்மையான அரசியல் நடக்கவில்லை. அரசியல் என்றால் நிறைய சமரசம் செய்ய வேண்டும். சமரசம் இல்லாமல் அரசியலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பா.ஜனதா கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். புதிதாக தேசிய தலைவர் வர உள்ளார். அதன்படி இந்த ஆண்டு இறுதியில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.