» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது ஆட்டோ மோதி விபத்து : சிறுமி பரிதாப சாவு - தந்தை படுகாயம்!
புதன் 24, ஜூலை 2024 8:21:48 AM (IST)
நெல்லை அருகே மோட்டார் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தந்தையுடன் சென்ற 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்..
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி ஊரைச் சேர்ந்தவர் முகம்மது மைதீன் (34). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி பக்கீரம்மாள். இவர்களுடைய மகன் முகமது பயாஸ், மகள் நஸ்ரின் பாத்திமா (8). இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் இரவு முகம்மது மைதீன் தனது மகள் நஸ்ரின் பாத்திமாவுடன் மோட்டார் சைக்கிளில் மானூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மானூர் - தெற்குப்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரே மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அண்ணாவிமுத்து மகன் முகேஷ்குமார் (24) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தந்தை, மகள் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நஸ்ரின் பாத்திமா படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். முகம்மது மைதீனுக்கு கால் முறிந்து பலத்த காயங்களுடன் ரோட்டில் கிடந்தார்.அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் பலியான சிறுமி நஸ்ரின் பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மோதி சிறுமி பலியான சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.