» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை!

திங்கள் 15, ஜூலை 2024 8:28:06 AM (IST)



சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி, நேற்று ‘என்கவுண்ட்டரில்’ சுட்டுக்கொல்லப் பட்டார். 

சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டிவரும் வீட்டு அருகே கடந்த 5-ந் தேதி, அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக செம்பியம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். 

இந்த வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், வினோத், அருள், செல்வராஜ், விஜய், கோகுல், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ரவுடிகளின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கும்படியும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் போலீஸ் துறைக்கு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரிலும், சென்னை மாநர போலீசாரும் ரவுடிகளை கண்காணிக்கும் பணியை தீவிரமாக்கியுள்ளனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு எழும்பூர் கோர்ட்டில் செம்பியம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கைதானவர்களை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன்பேரில் 4 தனிப்படை போலீசார், பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரையும் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் 3 வெடிகுண்டுகளை ஒரு பையில் போட்டு சம்பவ இடத்துக்கு எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த வெடிகுண்டுகளை மணலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

அவர் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக கொடுங்கையூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திருவேங்கடத்தை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

மாதவரம் ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை அருகே சென்றபோது, திருவேங்கடம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே போலீசார் அவரை ஜீப்பில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். அவர் அருகே பாதுகாப்புக்கு போலீசார் நின்றுக்கொண்டிருந்தனர். போலீசார் எதிர்பாராத நேரத்தில், திருவேங்கடம் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிக்க முயன்ற போலீசாரையும் தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

தப்பியோடிய ரவுடி திருவேங்கடத்தை உடனடியாக கைது செய்ய போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாதவரம், புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் புழல் பகுதியில் உள்ள வெஜிடேரியன் கார்டன் என்ற இடத்தில் ரவுடி திருவேங்கடம் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அவரை பிடிப்பதற்காக தண்டையார்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.

வெஜிடேரியன் கார்டன் 3-வது தெருவில் ஒரு தகர கொட்டகைக்குள் திருவேங்கடம் பதுங்கி இருந்தார். தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த ரவுடி திருவேங்கடம், தான் மறைத்து வைத்து இருந்த நாட்டுத்துப்பாக்கியால், போலீசாரை நோக்கி சுட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், சுதாரித்தனர். அதே நேரம், திருவேங்கடத்தை சரண் அடையுமாறும், துப்பாக்கியை கீழே போடுமாறும் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் திருவேங்கடம் சுடுவதை நிறுத்தாமல், வெறித்தனமாக சுட்டுக்கொண்டே இருந்ததாக தெரிகிறது.

இதனால் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி வேறுவழியின்றி, தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டதாக கூறப்படுகிறது. திருவேங்கடத்தின் வயிறு மற்றும் மார்பில் பாய்ந்து துளைத்தது. அம்மா... என்று அலறியபடி திருவேங்கடம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவரை தனிப்படை போலீசார் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த ‘என்கவுண்ட்டர்' சம்பவம் நேற்று காலை 7 மணி அளவில் நடந்தது.

என்கவுண்ட்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்கவுண்ட்டர் நடந்த இடத்துக்கு, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன், உதவி கமிஷனர்கள் சகாதேவன், சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் படையோடு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

திருவேங்கடம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை சுற்றி ஏராளமான குடோன்கள் உள்ளன. சற்று தொலைவில்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகள் உள்ளன. அது ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், இந்த ‘என்கவுண்ட்டர்' சம்பவம் குறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித தகவலும் முதலில் தெரியவில்லை. துப்பாக்கி குண்டு சத்தமும் கேட்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்ட பின்னர்தான் தங்கள் பகுதியில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தெரிய வந்தது என்று பொதுமக்கள் கூறினார்கள்.

போலீசாரை நோக்கி ரவுடி திருவேங்கடம் சுட்ட நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காகத்தான் அவரை மாதவரம் பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் ரவுடி திருவேங்கடம் ஏற்கனவே புழல் வெஜிடேரியன் கார்டன் பகுதியில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்துள்ளார். அந்த விவரம் போலீசாருக்கு தெரியாது. அந்த துப்பாக்கியை எடுத்துதான் போலீசாரை நோக்கி அவர் சுட்டதும் பின்னர் தெரிய வந்துள்ளது.

திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை போலீசார் இன்னும் கைப்பற்றவில்லை. அவற்றை பறிமுதல் செய்வதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்தின் உடல், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அவரது உடல் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடக்கும் போது ‘வீடியோ' பதிவு செய்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ‘என்கவுண்ட்டர்’ சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டு விசாரணை நடந்து உரிய அறிக்கை பெறப்பட்ட பின்னர்தான் திருவேங்கடத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 11-ந் தேதி புதுக்கோட்டையில் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துரையை பிடிக்கச்சென்றபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் தாக்கிவிட்டும் தப்பி ஓட முயன்றார். இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.

இந்த என்கவுண்ட்டர் சம்பவம் நடந்த 4-வது நாளில் சென்னையில் மீண்டும் ஒரு ‘என்கவுண்ட்டர்’ சம்பவம் நடந்துள்ளது. ஒரே வாரத்துக்குள் அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்துள்ளதால், போலீசாரின் அதிரடி நடவடிக்கை ரவுடிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த இந்த ‘என்கவுண்ட்டர்’ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மாதவரம், புழல், செங்குன்றம் பகுதிகளில் பரபரப்பு அதிகமாக காணப்பட்டது. அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

மனித நேய மானிடன்Jul 16, 2024 - 05:43:56 PM | Posted IP 172.7*****

சில போலீசார் எல்லாம் பொய்யை பயங்கரமாக உண்மையாக சொல்லுவார்கள்.

தமிழ்ச்செல்வன்Jul 15, 2024 - 10:10:20 AM | Posted IP 162.1*****

காவல் துறையின் திரைக்கதை அமைப்பு சூப்பர்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory