» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதல் விவகாரத்தில் இளம்பெண் கொடூர கொலை: நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:53:01 AM (IST)
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா ( 18). இவர் நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள பேன்சி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மதியம் கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுப்பதற்காக சந்தியா, அருகில் உள்ள குடோனுக்கு சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
உடனே சக ஊழியர்கள் குடோனுக்கு சென்று பார்த்தனர். அப்போது சந்தியா உடலில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் சந்தியா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, மேல முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது வாலிபர், நெல்லை டவுனில் உள்ள கடையில் முன்பு ஊழியராக வேலை செய்தார். அப்போது அவரும், சந்தியாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார்.
மேலும், சந்தியா காதலை கைவிட்டு அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் சந்தியாவின் சகோதரியை அந்த வாலிபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் சந்தியாவின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தது. உடனே சந்தியா, அவரிடம், ''என்னை விட்டு விடு, உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை'' என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று மதியம் சந்தியா குடோனுக்கு சென்றதை நோட்டமிட்ட அந்த வாலிபர் நைசாக அவரை பின்தொடர்ந்து சென்று பேச முயற்சித்துள்ளார். ஆனால், சந்தியா பேச மறுத்ததால், அவர் ஆத்திரத்தில் குடோனுக்குள் சென்ற சந்தியாவை விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சந்தியா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
அவரை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து தேடினார்கள். மேலும் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்தனர். பேன்சி கடை ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் இரவில் அந்த வாலிபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவில் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ரத வீதியில் உள்ள குடோனில் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.