» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துரை வைகோவிற்கு ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது ராஜ தந்திரமான முடிவு: நாஞ்சில் சம்பத்

புதன் 27, அக்டோபர் 2021 12:18:12 PM (IST)

துரை வைகோவிற்கு ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது வைகோ எடுத்திருக்கும் ராஜ தந்திரமான முடிவு  என்று நாஞ்சில் சம்பத் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

ம.தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, தினகரனை ஆதரித்தார். அதன்பின்பு தினகரனிடம் இருந்தும் விலகியதோடு கட்சி அரசியலுக்கு முழுக்கு போடுவதாகவும், இலக்கிய கூட்டங்களில் மட்டுமே பங்கேற்பேன் எனவும் கூறினார்.

சட்டசபை தேர்தல் நேரத்தில் நாஞ்சில் சம்பத் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பேசினார். அவர் மீண்டும் ம.தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 100 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவர் செய்துள்ளார். மிக குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.வை கைப்பற்றும் இடத்தில்தான் சசிகலா உள்ளார். அவரை யாரும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. துரை வைகோவிற்கு ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது வைகோ எடுத்திருக்கும் ராஜ தந்திரமான முடிவாகும். சுமையை பகிர்ந்து கொள்வதற்காகவும், ம.தி.மு.க.விற்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும் துரை வைகோ ஒரு கருவியாக இருப்பார். அவரை நியமிக்காமல் வேறு யாரை நியமித்திருக்க முடியும்?.

ம.தி.மு.க. இயக்கம் துப்பாக்கி ஓசையை விட பூகம்ப வேகத்தை விட வேகமாக செயல்படும் இயக்கமாகும். திராவிட இயக்கத்தின் கோட்டை தமிழகம் என்பதை நிரப்ப ம.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும். வாரிசு அரசியல் என்பது வேறு, வரலாற்று அரசியல் என்பது வேறு. ம.தி.மு.க. அதிகாரத்திற்கு வரும் கட்சி அல்ல. போராட பிறந்த கட்சியாகும். போராட்டக்களத்தில் துரை வைகோவிற்கு நான் துணை நிற்பேன்.

திராவிட இயக்கத்தின் செயல்பாட்டாளராக கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். நான் எனது பங்களிப்பை தருகிறேன் என்று கூறி அதை நிரூபித்துள்ளேன். துரை வைகோவிற்கு உதவிகரமாக இருக்க திட்டமிட்டு உள்ளேன். ஆனால் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. திராவிட இயக்கத்தின் செயல்பாட்டாளராக தொடர்ந்து செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory