» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!

சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிய கோர விபத்தில் 71 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி நேதாஜி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (71). அயனிங் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி செல்வி, ஸ்டெர்லைட் தாமிரா குடியிருப்பில் சலவை வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில், வேலை முடிந்த தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ரத்தினவேல் தனது டிவிஎஸ் எக்ஸ்.எல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மீளவிட்டான் சாலை வழியாக வந்து மதுரை பைபாஸ் சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக ரத்தினவேலின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரத்தினவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தின் அதிர்வில் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திடீரெனத் தீப்பற்றி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மோதிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கி நின்றது. விபத்து குறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் மற்றும் உதவி ஆய்வாளர் காவுராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ரத்தினவேலின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (43) சிப்காட் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory