» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உயிரிழந்த சிறுமியின் படத்தை வெளியிடக் கூடாது : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வியாழன் 12, மார்ச் 2026 8:20:55 PM (IST)

விளாத்திகுளம் அருகே சிறுமியின் உடல் துண்டு துண்டாக மீட்கப்பட்டதாகப் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்றும், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 10.03.2026 அன்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குளத்தூர் போலீசார் 'சிறுமி காணவில்லை' என வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்தப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பிரபல செய்தித் தொலைக்காட்சி ஒன்று, "விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்பு" எனச் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மாவட்ட காவல்துறை கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில்: சிறுமியின் சடலம் சம்பவ இடத்தில் முழுமையாகவே கண்டெடுக்கப்பட்டது. உடல் துண்டு துண்டாக மீட்கப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல். சிறுமி பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும்.

காவல்துறை எச்சரிக்கை: வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், உண்மைத்தன்மை தெரியாமல் வதந்திகளைப் பரப்பிப் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உயிரிழந்த சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் (WhatsApp), முகநூல் (Facebook) போன்றவற்றில் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory