» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் : மாணவர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை!

சனி 5, ஏப்ரல் 2025 4:08:38 PM (IST)



ஒவ்வொரு மாணவர்களும் தங்களது எதிர்கால கனவை நனவாக்கக்கூடிய பாடப்பிரிவை தேர்வு செய்து, நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை வழங்கினார். 

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2023-24ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ‘என் கல்லூரிக் கனவு” (எனது எதிர்கால கனவு நனவாகும் நிகழ்வு) உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்த்தாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையை குறைக்கவும் ‘என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இன்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. 

ஒவ்வொரு மாணவர்களின் எதிர்கால கனவை நினவாக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ – மாணவியர்கள் வருகைதந்துள்ளீர்கள். முதலில் உயர்கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் உயர்கல்வி கற்பதனால் உங்களுடைய வாழ்க்கைத்தரம் படிப்படியாக உயரும் என்பதில் எந்தவொரு ஐயமில்லை. 

உயர்கல்வி கற்பதனால் தங்களுடைய அறிவை மென்மேலும் வளர்த்து கொள்ள முடியும். இதில் ஒரு சில மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து தொழில் தொடங்கி ஒரு தொழில் முனைவோராக ஆக முடியாதா என்று கேட்கலாம்? ஆகலாம் ஆனால் அந்த தொழிலை திறம்பட நேர்த்தியாக கையாளுவதற்கு உயர்கல்வி மிகவும் முக்கியப்பங்கு வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி பயிலும் காலகட்டத்தில் பல்வேறு நிலைகளிலிருந்து வரக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதினால் அவர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளிலிருந்து வரக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு உயர்கல்வி மிகவும் அவசியம். 

கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் நலன்காக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான பேர் போட்டித்தேர்வு எழுதினாலும் சில நூறு பேருக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, தங்களது தனத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் போது மாணவர்களிடையே தலைமைப் பண்பு வளரும். அதாவது, ஒரு வேலையை எப்படி நேர்த்தியாக செய்வது, அதனை எவ்வாறு ஒருங்கிணைப்பது, குறிப்பிட்ட நேரத்தில் எவ்வாறு முடிப்பது, உரிய நேரத்தில் முடிவெப்பது உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களையும் பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

இந்த அனுபவம் தான் உங்கள் எதிர்காலத்திற்கான முதற்படி. அது எங்கு கிடைக்கிறது என்றால் உயர்கல்வியில் தான். ஒவ்வொரு மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு உயர்ந்தநிலையில் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவாக ஒரு இலக்காக இருக்கும். அதனை மாணவர்களாகிய நீங்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டும். உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது. எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கலாம். எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்து படித்தால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும். பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து இந்நிகழ்ச்சி மூலம் பல்வேறு கல்வியாளர்கள், வல்லுநர்கள் உங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குவார்கள். உங்களுக்கு விருப்பமான பாடத்தை படியுங்கள். பட்டப்படிப்பு படித்தால் மத்திய, மாநில அரசு பணிகள் மற்றும் வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எழுதலாம்.

மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பி எடுக்கக்கூடிய பாடப்பிரிவு உங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. ஆகையால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவா என்பதை நன்கு அறிந்து ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 3 முதல் 5 வரையில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தவறாது பின்பற்ற வேண்டும்.

இதில், இறுதியாக எந்த பாடப்பிரிவு எடுத்தால் உங்கள் எதிர்கால கனவு நனவாகும் என்று என்னுகிறீர்களோ அந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படியுங்கள். மேலும், தனியார் கல்லூரியில் விண்ணப்பிக்க செல்லும் போது அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக முடிவடைந்துவிட்டதா என்பதை ஆராய்ந்து, இதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டுக்கு செல்ல வேண்டும். எனவே, உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய நேரம் தொலைவில் இல்லை. ஆகையால், தேர்வு முடிவுகள் வந்த பிறகு நன்கு கவனமாக சரியாக ஆலோசித்து தங்களது எதிர்கால கனவை நனவாக்கக்கூடிய பாடப்பிரிவைத் தேர்வுசெய்து நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜா.பென்னட் ஆசீர், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, மாவட்ட மேலாளர் தாட்கோ ஜெனிஷிஸ்.ம.ஷிபா, தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, பாலகிருஷ்ணன், பள்ளி மாணவ – மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory